2012-07-13 16:12:06

ஆசியாவில் போர்களும் ஆயுத வியாபாரமும் நிறுத்தப்படுவதற்கு ஆசிய ஆயர்கள் வேண்டுகோள்


ஜூலை13,2012. ஆசியக் கண்டத்தில் பல்வேறு சூழல்களில் இடம்பெற்று வரும் போர்களும், போர்களோடு தொடர்புடைய நடவடிக்கைகளும் நிறுத்தப்படுமாறு ஆசிய ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆசியக் கண்டத்தை இரத்தத்தில் நனைக்க உதவும் ஆயுத வியாபாரங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு உலகளாவிய அமைதிக்கு ஆசியக் கண்டம் தன்னை அர்ப்பணிக்குமாறும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் அவர்களின் “அவனியில் அமைதி” என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டையொட்டி, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் மனித முன்னேற்ற ஆணையம் எடுத்த முயற்சி குறித்து Fides செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, அவ்வாணையச் செயலர் அருள்தந்தை நித்ய சகாயம் ஆசிய ஆயர்களின் இவ்வேண்டுகோள் குறித்துக் குறிப்பிட்டார்.
உலகில் போர்களும் ஆயுத வியாபாரமும் நிறுத்தப்படுவதற்கு இவ்வாணையம் எடுத்த முயற்சியில், ஆசியத் திருஅவைத் தலைவர்கள், பிற சமயத் தலைவர்கள் மற்றும் சுமார் 5,000 பல்சமயப் பிரதநிதிகள் இணைந்துள்ளனர் என்று அருள்தந்தை நித்யா கூறினார்.
உலக ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்குப் பல நாடுகள் தங்களைத் தயாரித்து வரும்வேளை, இந்த உலக ஒப்பந்தத்திற்கு ஆதரவாக ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் மனித முன்னேற்ற ஆணையமும் தனது விண்ணப்பத்தை ஐ.நா.பொதுச்செயலருக்குச் சமர்ப்பித்துள்ளது.உலகில் பெருமளவில் கடும் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகும் ஆயுத வியாபாரம், உலக அளவில் ஆண்டுதோறும் ஆயிரம் பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டித் தருகின்றது என்று ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.