2012-07-13 16:11:10

'Vatileaks' குழு தனது விசாரணையின் முடிவுகளை வரும் வாரத்தில் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கும் : திருப்பீடப் பேச்சாளர்


ஜூலை13,2012. 'Vatileaks' எனப்படும் நம்பகத்தன்மைமிக்க வத்திக்கான் ஆவணங்கள் பொதுவில் வெளியாகியது குறித்த விசாரணைகளின் முடிவு விரைவில் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்படும் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்காகத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நியமித்த கர்தினால் Julian Herranz தலைமையிலான மூன்று கர்தினால்கள் கொண்ட குழு தங்களது விசாரணைகளின் இறுதி அறிக்கையை வரும் வாரத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிருபர்களிடம் இவ்வியாழன் மாலை அறிவித்தார் அருள்தந்தை லொம்பார்தி .
அதேசமயம், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அறையிலிருந்து நம்பகத்தன்மைமிக்க வத்திக்கான் ஆவணங்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த மே 23ம் தேதி கைது செய்யப்பட்ட திருத்தந்தையின் பணியாள் Paolo Gabriele, வத்திக்கான் காவல்நிலையத்தில் தொடர்ந்து வைக்கப்படுவார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி அறிவித்தார்.
46 வயதாகும் Gabrieleவை விசாரணை நடத்தி வரும் நீதிபதி அவ்விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்தில் முடிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் நிருபர்களிடம் கூறினார்.
திருப்பீட சட்டங்கள் அவையின் முன்னாள் தலைவரான 82 வயதாகும் இஸ்பானிய கர்தினால் Julian Herranz தலைமையில் விசாரணை நடத்தும் மூன்று பேர் கொண்ட இக்குழுவில், இக்கர்தினாலுக்கு உதவியாக விசுவாசப்பரப்புப் பேராயத்தின் முன்னாள் தலைவரான 88 வயதாகும் சுலோவாக்கிய கர்தினால் Jozef Tomko மற்றும் சிசிலியின் பலேர்மோவின் முன்னாள் பேராயரான 81 வயதாகும் கர்தினால் Salvatore De Giorgi உள்ளனர்.மேலும், நாசரேத்தூர் இயேசு என்ற தனது நூலின் மூன்றாவது தொகுப்பை முடிப்பதற்குத் திருத்தந்தை இந்தக் கோடை விடுமுறையைப் பயன்படுத்தி வருகிறார் என்றும் அறிவித்த அருள்தந்தை லொம்பார்தி, வருகிற செப்டம்பரில் லெபனனுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவும், வருகிற அக்டோபரில் தொடங்கும் விசுவாச ஆண்டுக்கும் திருத்தந்தை தயாரித்து வருகிறார் என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.