2012-07-12 15:09:59

குழந்தைகள் பிறப்பு விகிதம் 1.8 விழுக்காடு அளவு உயரவேண்டும் – தென்கொரிய அரசு


ஜூலை,12,2012 குழந்தைப்பேறு, குடும்பநலம் என்ற கொள்கைகளைப் பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்த தென்கொரிய கத்தோலிக்கத் திருஅவையின் எண்ணங்களை ஆதரித்து அந்நாட்டு அரசு அறிக்கையொன்றை இப்புதனன்று வெளியிட்டது.
ஜூலை 11, இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட உலக மக்கள்தொகை நாளையொட்டி, தென்கொரிய நலவாழ்வுத்துறை விடுத்துள்ள ஓர் அறிக்கையில், தங்கள் நாட்டில் இன்னும் அதிகமான குழந்தைகளை மக்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
உலகிலேயே மிகக் குறைந்த 1.05 விழுக்காட்டு குழந்தைகள் பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது தென்கொரியா. இந்த நிலை அடுத்த பத்தாண்டுகளில் கூடி, குழந்தைகள் பிறப்பு விகிதம் 1.8 விழுக்காடு அளவு உயரவேண்டும் என்று இந்த அரசு அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் இந்தப் பிரச்னையை உணர்ந்திருந்த தென்கொரியத் திருஅவை, குழந்தைப்பேறு, குடும்பநலம் என்ற கொள்கைகளை வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.