2012-07-11 15:19:44

ஜூலை 11 - உலக மக்கள்தொகை நாளையொட்டி, ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி


ஜூலை,11,2012. குழந்தைப் பேறுகால நலவசதிகள் அனைவருக்கும் சமமாக கிடைப்பதற்கு உலக அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை நாள் என்று ஐ.நா. அறிவித்துள்ளது. 1989ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப்படும் இந்நாளையொட்டி, இவ்வாண்டுக்கான செய்தியை வெளியிட்ட பான் கி மூன், குழந்தைப் பேறு நலவசதிகள் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதை எடுத்துரைத்தார்.
ஐ.நா. அமைப்பு உருவான 1945ம் ஆண்டில் இருந்த உலக மக்கள் தொகை தற்போது மூன்று மடங்கு அதிகமாகி, 700 கோடிக்கும் அதிகமாக உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டிய பான் கி மூன், உலகின் செல்வங்கள் சமமான முறையில் பகிரப்படாததே உலகின் முக்கியப் பிரச்சனை என்றும் தன் செய்தியில் கூறியுள்ளார்.
குழந்தைப் பேறுகாலப் பிரச்சனைகளால் உலகெங்கும் 800 பெண்கள் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர் என்று ஐ.நா. குடும்பக் கட்டுப்பாடு அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் 180 கோடி இளையோர் வயதுக்கு வந்தவண்ணம் உள்ளனர் என்று கூறும் ஐ.நா. அறிக்கை, பொதுவாக, குடும்ப அமைப்பு குறித்து இளையோருக்கு சரியான தகவல்கள் சென்றடைவதில்லை என்றும் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.