2012-07-10 15:32:30

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 130 - பாகம் இரண்டு


RealAudioMP3 அவசரம். எல்லாருக்கும் அவசரம். எப்பொழுதும் அவசரம். வீட்டிலிருந்து தாமதமாகத்தான் கிளம்புவோம். ஆனால் நாம் போனவுடனேயே பேருந்து கிடைக்கவேண்டும், இரயில் கிடைக்கவேண்டும் என்ற அவசரம் பெரும்பாலும் எல்லாரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. மின்கட்டணமாக இருக்கலாம் அல்லது தொலைபேசிகட்டணமாக இருக்கலாம், வரிசையில் நிற்காமல் போனவுடனேயே கட்டிவிட்டு வந்துவிடவேண்டும் என எல்லாருமே ஆசைப்படுகிறோம். 10 அல்லது 12ம் வகுப்பு படித்த பிள்ளைகளுக்கு பள்ளியிலோ, கல்லூரியிலோ போனவுடனேயே விரும்புகின்ற துறையில் சீட்டு கிடைத்துவிடவேண்டும் என எல்லாருமே விரும்புகிறோம். அரசு சம்பந்தப்பட்டக் காரியங்களில் தனக்கு முன்னிருப்பவர்களைக் கண்டுகொள்ளாமல் குறுக்கு வழியில் முன்னேறிச் சென்று காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதில் இந்தியருக்கு இணை யாரும் இருக்கமுடியாது. இவ்வாறு எல்லாவற்றுக்குமே அவசரம். காத்திருப்பது யாருக்கும் பிடிப்பதில்லை. காத்திருப்பது என்பது கசக்கிறது.
பள்ளியில் படிக்கும் பையனுக்கு படிப்பை முடித்து வேலை பார்க்க வேண்டும் என்று அவசரம். வேலைக்குச் செல்பவருக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்று அவசரம். திருமணம் முடித்தவருக்கு எளிதாக வாழ்வில் நல்லநிலைமையை அடைய வேண்டும் என்று அவசரம். அவர்கள் இருக்கும் பருவத்தை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்பவர் யார் என்று கேட்டால் நூற்றுக்கு 99 விழுக்காடு இல்லை என்ற பதில்தான் வரும். இப்படிப்பட்ட அவசர உலகில் வாழும் நமக்கு, இன்றைய விவிலியத்தேடல் கொடுக்கும் செய்தி காத்திருங்கள் என்பதுதான்.
கடந்தவாரம் நாம் சிந்தித்த திருப்பாடல் 130ஐ இன்று மற்றொரு கோணத்தில் சிந்திப்போம். இப்பாடல் காத்திருப்பதன் அவசியத்தையும், அதன் பொருளையும், அதன் ஆழத்தையும் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றது என்று கடந்தவாரமே குறிப்பிட்டோம். இன்று காத்திருப்பது என்பதைப்பற்றி மட்டும் இன்னும் சற்று ஆழமாக சிந்திப்போம்.

காத்திருப்பது என்பது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருடைய வாழ்விற்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை. ஏனெனில், எந்தெந்த காலத்தில் எது, எது நடக்க வேண்டுமோ அது, அது அந்தந்த காலத்தில் நடக்கவேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டும். அவ்வாறு காத்திருக்கவில்லையெனில், பிஞ்சிலேயே வெம்பிய காயைப் போலாகிவிடும்.
ஐந்து வயதில் இறைவனைப் பற்றி நாம் கொண்டிருந்த எண்ணங்களும், சிந்தனைகளும் 50 வயதில் இறைவனைப்பற்றி நாம் கொண்டிருக்கின்ற சிந்தனைகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறதல்லவா? இறைவன் தன்னை முழுமையாக ஒரே சமயத்தில் வெளிப்படுத்துவதில்லை. ஏனெனில் மனிதர்களால் இறைவனை முழுமையாக, அதுவும், ஒரே சமயத்தில் புரிந்துகொள்ள முடியாது. எனவே, படிப்படியாக ஒவ்வொரு நாளும் இறைவன் தன்னையே வெளிப்படுத்துகின்றார். அப்படியிருந்தும் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றல் மனிதர்களிடத்தில் இல்லை என்பதும் நமக்கு நன்கு தெரிந்ததே. 100 ஆண்டுகள் வாழ்ந்த மனிதர்கள் கூட இறைவனைப்பற்றி முழுமையாகச் சொல்ல முடியவில்லை. பழைய ஏற்பாட்டுக் காலத்தில 900 ஆண்டுகள் வாழ்ந்த மனிதர்கள் கூட இறைவனைப்பற்றி முழுமையாகச் சொல்ல முடியவில்லை. எனவே இறைவெளிப்பாட்டிற்காக நாம் காத்திருக்க வேண்டும். காத்திருப்பு என்பது வெறுமனே நேரத்தை வீணடிப்பது என நினைக்கிறோம். காத்திருப்பு என்பது நம்பிக்கை என்ற இறையியல் புண்ணியத்தை வளர்க்கிறது என்பதை மறந்து விடுகிறோம். தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பதற்கோ அல்லது விளையாட்டுப் பார்ப்பதற்கோ காத்திருக்கிறோம். நம் வீட்டுத்தொலைக்காட்சி வேலைசெய்யும் என்ற நம்பிக்கையில்தானே உட்கார்ந்திருக்கிறோம். அதேபோல காத்திருப்பதும் நம்பிக்கையும் இணைந்தே செல்கின்றன. நம்பிக்கையோடுதான் காத்திருக்கிறோம். இறைவனுக்காகக் காத்திருப்பது இறைவனின் மேலுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதோடு அதே நம்பிக்கை மேலும் அதிகரிக்கவும் செய்கிறது. காத்திருப்பதைத்தான் தூய பவுல் நம்பிக்கை என்று சொல்கிறார். இது குருட்டுத்தனமான காத்திருப்பு அல்ல. இறைவன் மன்னிப்பு அளிப்பார் என்று காத்திருக்கிறார்கள் என்றால் அவர் ஏற்கெனவே மன்னித்திருக்கிறார். அவரது மன்னிப்பைப் பற்றியும், அவர் மன்னித்தத் தருணங்களையும் அறிந்துகொண்டவர்கள் அவரை நம்பிக் காத்திருக்கின்றனர். எனவே இது ஆறஅமர சிந்தித்து காத்திருப்பது ஆகும்.

காத்திருப்பது என்பது நம்பிக்கை என்ற இறையியல் புண்ணியத்தோடு இன்னும் சில புண்ணியங்களையும் நம்மில் வளர்க்கிறது அவை தாழ்ச்சி மற்றும் பொறுமை. காத்திருப்பது மிகமுக்கியமான பொறுமை என்ற புண்ணியத்தை நம்மில் வளர்க்கிறது. நம்மால் முடிகிற காரியமாக இருந்தால் நாம் உடனே செய்து முடித்து விடுவோம். அதற்கான நேரம் வரட்டும் என்று காத்திருக்க மாட்டோம். எடுத்துக்காட்டாக, நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்களில் சிலர் பேறுகால வலியைப் பொறுக்கமுடியாமல் குழந்தைப் பிறப்பதற்கான நேரம் வரவில்லையெனினும், பரவாயில்லை என்று பொறுமையிழந்து அறுவை சிகிச்சை செய்து விடுங்கள் என்று சொல்லிவிடுகின்றனர். குழந்தைபிறப்பதற்கான நேரத்திற்காகப் பொறுத்திருந்து வலியைத் தாங்கிக்கொண்டால் அறுவை சிகிச்சை இல்லாமல் தப்பித்துக்கொள்ளலாம். அதோடு அறுவை சிகிச்சை செய்துகொண்டு காலத்திற்கும் கனமான எதையும் தூக்கமுடியாமல், பார்த்து, பார்த்து இருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நம்மால் முடியாத காரியமாக இருந்தால் என்ன செய்வோம்? யாரால் செய்யமுடியுமோ அவர் சிறியவராக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும் அவர்களுக்காக நாம் காத்திருப்போம். இது தாழ்ச்சி என்ற புண்ணியத்தை நம்மில் வளர்க்கிறது. இவ்வகைக் காத்திருப்புகள் நமக்கு பல்வேறு புண்ணியங்களைச் சொல்லிக்கொடுக்கின்றன.

இறைவிருப்பத்தை அறிந்துகொள்ள விரும்புகிறோம். அறிந்து அதற்கேற்ப நடக்க நாம் விரும்புகிறோம். பொதுவாக வாழ்வின் முக்கியமான நேரங்களில் படிப்பு அல்லது வேலைக்கு எந்தத்துறையைத் தேர்வு செய்வது, திருமணம் செய்துகொள்வதா அல்லது அருட்பணியில் தன்னை இணைத்துக்கொள்வதா? வேலைக்கு என்றால் எந்த வேலையில் சேர்வது? இறைவனுடைய விருப்பம் என்ன என அறிந்து கொள்ளவிரும்புகிறோம். பெரும்பாலான நேரங்களில் இறைவன் நமக்கு அளிக்கும் பதில் ‘காத்திரு’ என்பதுதான். நாம் அவசரப்படுகிறோம் ஆனால் இறைவன் தக்க நேரத்தில் நமக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்கிறார். நம்மைக் காக்கிறார்.
பழிவாங்கும் உணர்வை மாற்றுவதற்கும் நம்முடைய உணர்ச்சிவயப்பட்ட நேரங்களில் நம்மைச் சரியாக வெளிப்படுத்தவும் காத்திருப்பு மிக முக்கிய ஆயுதம் என்று சொல்வதைக்கேட்டிருக்கிறேன். ஆத்திரமோ, அவசரமோ 5 நிமிடம் தள்ளிப்போட்டு விட்டு அதற்குப் பிறகு காரியத்தைச் செய்யுங்கள், நிச்சயமாக வெற்றிபெறலாம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இவ்வகையில் பழிவாங்குவது போன்ற தீய பழக்கவழக்கங்களை உதறித்தள்ளி புது மனிதர்களாக வாழ காத்திருப்பு நமக்கு உதவுகிறது.
இப்பாடலின் 6வது சொற்றொடரைப் பாருங்கள்.
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
இரவுநேரங்களில் வீட்டை அல்லது ஊரைக்காக்கும் காவலர்கள் எப்பொழுது விடியும், வேலை முடிந்து இல்லம் திரும்புவோம் என்று காத்துக்கிடப்பார்கள். விடியல் வரும் என்பதில் அவர்கள் உறுதியாய் இருக்கிறார்கள் நம்பிக்கையாய் இருக்கிறார்கள். விடிய ஆரம்பித்ததும் அவர்கள் மனதும் முகமும் கொஞ்சம் கொஞ்சமாக மலர்கிறது.
விடியும் எனக்காவலர்கள் நம்பிக்கையோடு காத்திருப்பதைப்போல ஆண்டவரும் வருவார் தங்களது விண்ணப்பத்திற்கான மன்றாட்டுக்கான பதிலைத் தருவார் என உறுதியாக இருக்கிறார். இவற்றையெல்லாம்விட இறைவன் நிச்சயமாக மன்னிப்பார் என்ற நம்பிக்கை மேலோங்கி நிற்பதாக நான் பார்க்கிறேன். நாளை விடியும் என்ற அறிவியல் கூற்றுகூட பொய்த்துப் போகலாம் ஆனால் இத்திருப்பாடல் நாயகர்களின் நம்பிக்கை தோற்றுப்போகாது என்ற உறுதியை இச்சொற்றொடரில் காணமுடிகிறது.

காத்திருப்பது என்று சொன்னதும் நமக்கு என்ன ஞாபகம் வருகிறது அன்பர்களே! ஏதோ ஒரு இடத்தில் அமைதியாக எந்த வேலையும் செய்யாமல் கடிகாரத்தையே பார்த்துக்கொண்டு ரொம்ப நேரம் காத்திருந்த விரக்தியின் வெளிப்பாடு முகத்தில் தெரியுமாறு அமர்ந்திருப்பது போன்ற தோற்றம் தானே நம் கண்முன் வருகிறது. காத்திருக்கும் சமயத்தில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதும், செய்யக்கூடாத காரியங்களை செய்யாமல் இருப்பதும் முக்கியம். அதைவிட காத்திருக்கும் அந்த நேரத்தில் நம் மனதில் எழுகின்ற எண்ணங்களும், சிந்தனைகளும் முக்கிய இடம் பெறுகின்றன. இந்த எண்ணங்களும், சிந்தனைகளும் எவற்றை நோக்கி இருக்கின்றன என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மொத்தத்தில், காத்திருக்கும் நேரத்தை நாம் பயனள்ள வகையில் செலவழிக்கவேண்டும். காத்திருக்கும் நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நாம் செயல்பட்டால் அது தேவையில்லாதப் பிரச்சனைகளைத்தான் உருவாக்கும். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு விடுதலைப்பயணம், 32வது பிரிவு, முதல் நான்கு சொற்றொடர்கள்:
மோசே மலையினின்று இறங்கிவரத் தாமதித்ததைக் கண்ட மக்கள் ஆரோனைச் சுற்றிக் கூட்டம் கூடி அவரை நோக்கி, 'எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. நீர் முன்வந்து எங்களை வழிநடத்தும் தெய்வங்களை எங்களுக்கு உருவாக்கிக்கொடும்' என்றனர்.
ஆரோன் அவர்களை நோக்கி, 'உங்கள் மனைவியர், புதல்வர் புதல்வியரின் பொற்காதணிகளைக் கழற்றி, அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்' என்றார்.
அவ்வாறே மக்கள் எல்லோரும் தங்கள் பொற் காதணிகளைக் கழற்றி, அவற்றை ஆரோனிடம் கொண்டு வர,
அவரும் அவர்கள் கையிலிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டு, உருக்கி, வார்ப்பு அச்சில் வடிவம் கொடுத்து, ஒரு வார்ப்புக் கன்றுக்குட்டியைச் செய்தார். அப்போது அவர்கள், 'இஸ்ரயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த உன் தெய்வங்கள் இவையே' என்றனர்.

விவிலியத்தில் மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்விலும் சும்மா இருக்கிறோம் என்பதால் செய்கின்ற காரியங்கள் தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்குவது நாம் சொல்லிப் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று அல்ல. கடவுளுடைய விருப்பத்தை அறிய காத்திருக்கும்போது, கடவுளுடைய திருவுளத்தை அறிய காத்திருக்கும்போது செபிப்பது நல்லது. காத்திருக்கும் நேரத்தை நாம் இறைவனை நினைப்பதில் செலவழிக்கலாம். அது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை வளர்ப்பதற்கு உதவும். உண்மையில் கடவுள் நேரம் தாழ்த்தவில்லை. மாறாக பல்வேறு மனிதர்கள் வழியாக, விவிலியம் வழியாக இன்னும் பல்வேறு வழிகளில் இன்னும் நேரம் வரவில்லை. எனவே பொறுத்திருங்கள், காத்திருங்கள் என்று சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார். நேரம் வரும்வரை பிள்ளைகள் துன்பப்படட்டும் என்று விட்டுவிடுவதுமில்லை. மாறாக அந்த நேரத்திற்குத் தேவையான ஆறுதலையும், வழிகாட்டுதலையும் தந்து கொண்டுதான் இருக்கிறார்.
இளம் குருமாணவர் ஒருவர் குருப்பட்டம் பெற்றதும் நிர்வாகம் படித்தவர் என்பதற்காக அவர் சார்ந்துள்ள துறவறசபையை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்துவிடமுடியுமா? நிர்வாகம் பற்றிய படிப்பு மட்டும் போதாது. மாறாக குருத்துவ வாழ்வில் அனுபவம் தேவை. பிற குருக்களையும், அத்துறவற சபையின் கீழ் உள்ள பங்குகள் நிறுவனங்களையும், அதில் பணியாற்றுகிறவர்களையும் புரிந்துகொண்டு வழிநடத்துகின்ற மேய்ப்புப் பணி அனுபவமும் மிகவும் அவசியமில்லையா? எனவே, காத்திருப்பது என்பது தக்க நேரத்தில் சரியானச் செயலைச் செய்வதற்கான தயாரிப்பு என்றும் சொல்லலாம். நம் வாழ்வின் முக்கிய கட்டத்தில் மிக முக்கிய முடிவை எடுப்பதற்குமுன் இறைவிருப்பத்தை அறியக் காத்திருக்கிறோம் என்றால் அந்த நேரம்தான் சரியான தாயாரிப்புக்கு உகந்தது.
எனவே அன்பார்ந்தவர்களே ஆண்டவருக்காகக் காத்திருக்க நாம் நம்மையே தயாரிப்போம். காத்திருப்போம். நிச்சயம் அவர் வருவார். நம்மை மன்னிப்பார். நம் விண்ணப்பங்களுக்கெல்லாம் செவிமடுப்பார்.








All the contents on this site are copyrighted ©.