2012-07-10 15:51:18

வத்திக்கான் உச்ச நீதிமன்றத் தலைவர் : நம்பகத்தன்மைமிக்க வத்திக்கான் ஆவணங்கள் வெளியாகியிருப்பது "மிகக் கடுமையான குற்றங்கள்"


ஜூலை10,2012. நம்பகத்தன்மைமிக்க வத்திக்கான் ஆவணங்கள் வெளியாகியிருப்பது "மிகக் கடுமையான குற்றங்கள்" என்று விவரித்துள்ள அதேவேளை, இதற்குப் பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு "தகுந்த தடுப்பு நடவடிக்கைகள்" எடுக்கப்பட வேண்டுமென்று வத்திக்கான் உச்ச நீதிமன்றத் தலைவர் வலியுறுத்தினார்.
Apostolic Signatura எனப்படும் வத்திக்கான் உச்ச நீதிமன்றத் தலைவர் கர்தினால் Raymond L.Burke, அயர்லாந்தில் நடைபெற்ற 5வது அனைத்துலக திருவழிபாடு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் நிருபர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருஅவையின் பணியைச் செய்யும் பொருட்டு அவர் மேற்கொள்ளும் நம்பகத்தன்மைமிக்கத் தகவல் பரிமாற்றங்கள் மதிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் கர்தினால் Burke.
இங்கு எதையும் மறைப்பதுபற்றிய கேள்வி இல்லை, ஆனால் மனச்சான்றை மதிப்பது மிகவும் முக்கியம் என்றுரைத்த கர்தினால், நம்பகத்தன்மைமிக்க வத்திக்கான் ஆவணங்களை வெளியிட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள்மீது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
"VatiLeaks" என்ற பெயரில் இத்தாலிய ஊடகம் வெளியிட்ட செய்திகள் கண்டு தான் திகைப்படைந்ததாகவும் வத்திக்கான் உச்ச நீதிமன்றத் தலைவர் கர்தினால் Raymond L. Burke கூறினார்.







All the contents on this site are copyrighted ©.