2012-07-09 16:46:35

பேராயர் Kaigama : நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவின் செயல்கள் இசுலாமுக்குப் புறம்பானவை


ஜூலை09,2012. நைஜீரியாவில் வன்முறைகள் இடம்பெறும் போது வெளிநாட்டு அரசுகள் மௌனம் காக்கின்றன மற்றும் தங்கள் குடிமக்களை நைஜீரியாவுக்குப் பயணம் செய்ய வேண்டாமெனச் சொல்கின்றன என்று நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Kaigama கவலை தெரிவித்தார்.
“ஆயுதக்களைவு பொன் புறாக்கள் அமைதி” விருதைப் பெறுவதற்காக உரோம் வந்திருக்கும் பேராயர் Kaigama வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
நைஜீரியாவில் வன்முறைகள் இடம்பெறும் நேரங்களில் வெளிநாட்டவரின் ஒருமைப்பாட்டுணர்வும் அன்பும் ஆதரவும் காணக்கூடிய விதத்தில் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.
நைஜீரியா குறித்து வெளிநாட்டவர் தங்கள் குடிமக்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை தன்னை மிகவும் புண்படுத்துவதாக இருக்கின்றது என்றுரைத்த பேராயர், நைஜீரியாவின் ஜோஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் போகோ ஹராம் அமைப்பின் குண்டுவைப்பு அச்சுறுத்தல்கள், அந்நாட்டில் நீண்ட காலமாக இடம்பெறும் மோதல்களை அதிகரிப்பதாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
வன்முறை ஒரு நுண்கிருமி, அது கட்டுப்படுத்தப்படாவிட்டால் அது தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும், இது ஒரு புற்றுநோய் போன்றது என்றும் பேராயர் எச்சரித்தார்.
வட நைஜீரியாவில் ஜோஸ் நகரத்திற்கு அருகே ஆயுதம் தாங்கிய முஸ்லீம் தீவிரவாதக் கும்பல்கள் இச்சனிக்கிழமை காலை, கிறிஸ்தவக் கிராமங்களைச் சூறையாடியதில் குறைந்தது 37 பேர் இறந்தனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்து கொண்டிருந்த போது இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.