2012-07-09 16:50:51

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம்


ஜூலை09, 2012. கடந்த ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்த மாநிலங்களில், மேற்கு வங்கம் முதலிடத்தையும், ஆந்திர பிரதேசம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன என்று, நாட்டின் குற்ற ஆவணங்கள் பிரிவு தெரிவித்துள்ளது..
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 7.5 விழுக்காட்டைக் கொண்டுள்ள மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த ஆண்டில், பெண்களுக்கு எதிராக, 29,133 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது, நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்த மொத்த குற்றங்களில், 12.7 விழுக்காடாகும். இதற்கு அடுத்தபடியாக, ஆந்திர மாநிலத்தில், 28,246 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது, மொத்த குற்றங்களில், 12.4 விழுக்காடாகும்.
நாட்டில், மொத்தமுள்ள 53 பெரிய நகரங்களில், தலைநகரான டில்லியில், 17.6 விழுக்காடு கற்பழிப்பு வழக்குகளும், 31.8 விழுக்காடு ஆட்கடத்தல் வழக்குகளும், 14 விழுக்காடு அளவுக்கு வரதட்சணை கொடுமை இறப்புகளும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், டில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 13.3 விழுக்காடு அளவுக்கும் (4,489), பெங்களூரில் 5.6 விழுக்காடு (1,890) அளவுக்கும், ஐதராபாத்தில் 5.5 விழுக்காடு (1,860) அளவுக்கும், விஜயவாடாவில் 5.3 விழுக்காடு (1,797) அளவுக்கும் நிகழ்ந்துள்ளன. விஜயவாடா, கோடா, கொல்லம், ஜெய்ப்பூர், அசன்சால் நகரங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அதிக அளவில் நிகழ்ந்துள்ளன என்று குற்ற ஆவணங்கள் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.