2012-07-09 16:45:13

திருத்தந்தை : திறந்த இதயம் இறைவன் புதுமைகளைச் செய்வதற்கு அனுமதியளிக்கின்றது


ஜூலை09,2012. இறைவன் நிகழ்த்தும் புதுமைகளைப் பெற வேண்டுமெனில் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவருக்குத் திறந்தமனம் உள்ளவர்களாய் வாழ்வது அவசியம் என்பதை இயேசு நசரேத்தூரில் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு கோடிட்டுக் காட்டுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இயேசு தமது சொந்த ஊராகிய நாசரேத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை விவரிக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து காஸ்தெல் கந்தோல்போ கோடை விடுமுறை இல்லத்தில், ஞாயிறு மூவேளை செப உரை நிகழ்த்திய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
உண்மையான விசுவாசத்தால் நாம் நிரப்பப்பட்டு, திறந்த மற்றும் எளிமையான இதயத்தோடு வாழ்ந்தால், நமது வாழ்க்கையில் இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்து அவரது விருப்பத்தைப் பின்செல்ல முடியும் என்று இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் இயேசு நமக்கு நினைவுபடுத்துகிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.
ஓர் இறைவாக்கினர் தமது சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் மதிப்புப் பெறுவார் என்று இயேசு நாசரேத் தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களிடம் கூறியது புரிந்து கொள்ளத்தக்கதே என்றும், மனித உறவு நிலையிலிருந்து நோக்குவது, அதையும் கடந்து இறையுண்மைகளுக்குத் திறந்த மனதாய் இருப்பதற்குத் தடையாய் இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
நாசரேத்தில், இயேசு மீது வெறுப்புணர்வு காட்டப்பட்டதால், சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை என்று புனித மாற்கு பதிவு செய்திருக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

இதனால் கிறிஸ்துவின் புதுமைகள் வல்லமையை வெளிப்படுத்துவதாக இல்லாமல், இறைவனின் அன்பின் அடையாளங்களாக இருக்கின்றன என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.