2012-07-07 15:44:05

பேராயர் தொமாசி : சமய சுதந்திரத்தை மதிப்பதாக அளித்த வாக்குறுதிகளைப் பல நாடுகள் புறக்கணிக்கின்றன


ஜூலை07,2012. சமய சுதந்திரத்தை மதிப்பதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பல நாடுகள் தவறியுள்ளன என்று திருப்பீட அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் குறை கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 20வது அமர்வில் சமய சுதந்திரம் குறித்து உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார்.
சமய சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மனச்சான்றின் சுதந்திரம், அடிப்படை மனித உரிமைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதாக சர்வதேச சமுதாயம் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்திற்கும், அவற்றைச் செயல்படுத்துவதற்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருவதாகப் பேராயர் சுட்டிக் காட்டினார்.
உண்மையான சமய சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரத்தை மட்டும் உள்ளடக்கவில்லை, மாறாக, போதித்தல், கற்பித்தல், புதிய உறுப்பினர்களை ஏற்றல், அரசியல் சொற்பொழிவுக்குப் பங்களித்தல், பொதுவான நடவடிக்கைகளில் கலந்து கொள்ளல் ஆகியவற்றையும் கொண்டது என்றும் பேராயர் தொமாசி கூறினார்.
அரசின் கொள்கைகள் அல்லது சட்டங்களுக்கும், விசுவாசிகளின் மதநம்பிக்கைகளுக்கும் இடையே முரண்பாடாக இருப்பவைகளைத் தேர்ந்தெடுக்குமாறு மத நம்பிக்கையாளர்கள் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்றும் திருப்பீட அதிகாரி பேராயர் தொமாசி ஐ.நா.வில் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.