2012-07-07 15:45:16

காந்தியின் அரிய கடிதங்களை விலைக்கு வாங்குகிறது இந்தியா


ஜூலை07,2012. தென்னாப்ரிக்காவில் மகாத்மா காந்தி வாழ்ந்த போது எழுதிய அரிய கடிதங்கள், அவருடைய ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை விலைக்கு வாங்குவதற்கு ஏல நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
மகாத்மா காந்தியின் ஆயிரத்துக்கும் அதிகமான அரிய கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை சர்வதேச ஏல நிறுவனமான சோத்பி வரும் 10ம் தேதி ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது. ஆயினும் இந்திய அரசின் இந்த உடன்பாட்டால் இந்த ஏலம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் அரிய கடிதங்கள் 5 இலட்சம் பவுண்ட் முதல் 7 இலட்சம் பவுண்ட் வரை விலை போகும் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய அரசு எவ்வளவு பணம் தரப்போகிறது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இந்த அரிய கடிதங்களில் காந்திஜியின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் அடங்கி உள்ளன.
காந்தியின் அரிய கடிதங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இவை விலைமதிப்பற்றவை என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.