2012-07-07 15:44:49

இலங்கைக்குத் திரும்பும் அகதிகள் எண்ணிக்கை குறைகிறது


ஜூலை07,2012. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குத் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு ஜூன் மாத இறுதி வரை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் குறைந்திருப்பதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில், இதுவரை 662 அகதிகளே, தாங்களாக முன்வந்து திரும்ப வந்திருப்பதாகக் கூறும் ஐ.நா அகதிகள் நிறுவனம், இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலத்தில் 962 ஆக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
2011ம் ஆண்டில் மொத்தம் 1,728 அகதிகள், ஐ.நா. அகதிகள் நிறுவனத்தின் உதவியுடன் நாடு திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
அகதிகள் திரும்புவது குறைந்திருப்பதற்கான காரணங்கள் என்னவென்று கூறுவது கடினம் என்று கூறும் அந்நிறுவன அதிகாரி Michael Zwack, நாடு திரும்புவது என்பது தனிப்பட்ட ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு என்றார்.
UNHCR என்ற ஐ.நா. அகதிகள் நிறுவனம் 2011ம் ஆண்டின் இறுதியில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் தமிழ் நாட்டில் 112 அகதிகள் முகாம்களில் 68,152 இலங்கை அகதிகள் வாழ்ந்தனர். அகதிகள் முகாம்களுக்கு வெளியே, தமிழ்நாட்டில் 32,476 அகதிகள் இருக்கின்றனர் என்றும், உலகெங்கிலும் சுமார் 1,36,000 இலங்கைத் தமிழ் அகதிகள் 65 நாடுகளில் வாழ்வதாகவும் இந்நிறுவனம் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.