2012-07-06 15:56:24

கர்தினால் அமாத்தோ : இந்திய மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை துன்புறும் கிறிஸ்தவர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு


ஜூலை06,2012. இக்காலத்தில் அடக்குமுறைக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்களுக்கு 18ம் நூற்றாண்டு இந்திய மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை சிறந்ததோர் சுடர்விடும் எடுத்துக்காட்டு என்று புனிதர்நிலைக்கு உயர்த்துவதற்குப் பொறுப்பான பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ கூறினார்.
L'Osservatore Romano என்ற திருப்பீடச் சார்பு தினத்தாளுக்குப் பேட்டியளித்த கர்தினால் அமாத்தோ, தேவசகாயம்பிள்ளையின் வாழ்க்கை “உண்மையிலேயே அசாதரணமானது” என்று குறிப்பிட்டார்.
உயர்குல இந்துவாகிய தேவசகாயம்பிள்ளை கிறிஸ்தவத்திற்கு மனம் மாறியபொழுது அவர் தனது இந்துமதத்தினராலேயே கடும் அடக்குமுறைத் துன்பங்களுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு அனைத்துவிதமான சித்ரவதைகளுக்கும் உட்பட்டார், இறுதிவரை தனது திருமுழுக்கு விசுவாசத்தில் உறுதியாயிருந்தார் என்றும் கர்தினால் அமாத்தோ பாராட்டினார்.
இந்தியத் திருஅவை இக்காலத்தில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதால், தேவசகாயம்பிள்ளை இந்தியாவுக்கு வியத்தகு மற்றும் மாபெரும் சான்றாகத் தற்போது திகழ்கிறார் என்றும் இத்திருப்பீட அதிகாரி தெரிவித்தார்.
1712ம் ஆண்டு உயர்சாதியில் பிறந்த இவர், 1745ம் ஆண்டு கோட்டாறு மறைமாவட்டத்தில் திருமுழுக்குப் பெற்று தேவசகாயம் என்ற பெயரை ஏற்றார். அவரது மனைவியும் மனம் மாறி ஞானப்பூ அம்மாள் என்ற பெயரை ஏற்றார். திருவிதாங்கூர் மன்னர் மாளிகையில் முக்கியப் பணியில் இருந்த இவர், 1749ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஒவ்வொரு நகரமாக இழுத்துச் செல்லப்பட்டு சித்ரவதைப்படுத்தப்பட்டார். கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினால் என்ன நடக்கும் என்பதை இதன் மூலம், மற்ற மக்களையும் அதிகாரிகள் அச்சுறுத்தினர். இறுதியில் ஆரல்வாய்மொழி என்ற ஊரில் 1752ம் ஆண்டு சனவரி 14ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் தேவசகாயம்பிள்ளை.
இறையடியார் தேவசகாயம்பிள்ளை இவ்வாண்டுக்குள் அருளாளர் என அறிவிக்கப்படவுள்ளார். இந்தியாவில் பிறந்த தமிழரான இவர், இந்நிலைக்கு உயர்த்தப்படும் இந்திய முதல் மறைசாட்சியாவார்.







All the contents on this site are copyrighted ©.