2012-07-05 16:24:19

2011ம் ஆண்டில் திருப்பீட நிதி நிலை


ஜூலை,05,2012. திருப்பீடத்தின் 2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒரு கோடியே 48 இலட்சத்து 90 ஆயிரத்து 34 யூரோக்கள் நிதிப்பற்றாக்குறை இருந்ததாக இப்புதனன்று திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
திருப்பீடத்தின் நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்கான கர்தினால்கள் அவை இத்திங்கள் மற்றும் இச்செவ்வாய் தினங்களில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே தலைமையில் நடத்திய கூட்டத்தின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய நிதிச்சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியோடு திருப்பீடத்தில் 2832 பேர் ஊதியம் பெறுபவர்களாய் இருந்ததும், இன்னும், திருப்பீடத்தின் ஊடகத்துறைகளின் செலவினங்களும் இந்தப் பற்றாக்குறைக்குக் காரணங்களாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
மேலும், நிர்வாகத்தில் தனித்தியங்கும் வத்திக்கான் நகரத்தில் 2011ம் ஆண்டின் வரவு செலவுப் பட்டியலில் 21 கோடியே 84 இலட்சத்து 3,851 யூரோக்கள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் இப்புதனன்று வெளியான திருப்பீட அறிக்கை தெரிவிக்கிறது.
2011ம் ஆண்டு டிசம்பரில் வத்திக்கான் நகரத்தில் 1887 பேர் பணியில் இருந்ததாகவும், வத்திக்கான் அருங்காட்சியகம், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கென வழங்கப்படும் இராயப்பர் காசு என்ற நன்கொடை, IOR என்ற சமயப்பணிகள் நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து கிடைத்த நிதி ஆகியவற்றாலும் வத்திக்கான் நகர வரவு செலவுக் கணக்கில் வரவைவிட செலவு குறைவாக இருந்ததாக்க் காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் வத்திக்கான் அருங்காட்சியகத்தை 50 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பார்வையிட்டனர் எனவும், அதனால் கிடைத்த வருமானம் 9 கோடியே 13 இலட்சம் யூரோக்கள் எனவும், இத்தொகை, அதற்கு முந்தைய ஆண்டைவிட 89 இலட்சம் அதிகம் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கென 2010ம் ஆண்டில் 6,77,04,41,641.41 கிடைத்த நிதி 2011ம் ஆண்டில் 6,97,11,72,276 டாலராக அதிகரித்திருந்த்து என்றும், IOR என்ற சமயப்பணிகள் நிறுவனம் 2011ம் நிதி ஆண்டில் 4 கோடியே 90 இலட்சம் யூரோக்களை திருத்தந்தைக்கு வழங்கியது என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் திருப்பீடத்துக்கு உதவும் விசுவாசிகள் மற்றும் திருஅவை நிறுவனங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளது இக்கர்தினால்கள் அவை.








All the contents on this site are copyrighted ©.