2012-07-04 15:45:08

திருஅவையில் பொதிந்திருக்கும் விலைமதிப்பற்ற கருவூலங்களைக் கொண்டாட, விசுவாச ஆண்டு தகுந்ததொரு தருணம்


ஜூலை,04,2012. அன்னையாம் திருஅவையில் பொதிந்திருக்கும் ஞானம், உண்மை ஆகிய விலைமதிப்பற்ற கருவூலங்களைக் கொண்டாட நாம் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டு தகுந்ததொரு தருணம் என்று மும்பை உயர்மறைமாவட்டப் பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.
இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட புனித தோமாவின் திருநாளையொட்டி ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியொன்றில் மும்பை உயர் மறைமாவட்ட பாப்பிறை மறைபரப்புக் கழகங்களின் புதிய இயக்குனர் அருள்தந்தை Savio de Sales, இவ்வாறு கூறினார்.
புனித தோமாவினால் இந்தியாவில் விதைக்கப்பட்ட விசுவாச விதைகள், புனித பிரான்சிஸ் சேவியர் போன்ற தலைசிறந்த புனிதர்களால் வளர்க்கப்பட்டது என்று கூறிய அருள்தந்தை Sales, இந்த விசுவாசத்தின் வெளி அடையாளமாக அருளாளர் அன்னை தெரேசா விளங்கினார் என்று கூறினார்.
இறை உணர்வைப் படிப்படியாக இழந்து வரும் இன்றைய உலகில் நமது விசுவாசத்தை மீண்டும் கண்டுணர புதிய நற்செய்திப் பணி என்ற கருத்தையும், விசுவாச ஆண்டையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ளது இவ்வுலகிற்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு என்று அருள்தந்தை Sales எடுத்துரைத்தார்.
இந்தியா போன்ற நாடுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே என்றாலும், சமுதாய அக்கறையாலும், பல்சமய உரையாடல்களாலும் இந்நாட்டில் விசுவாசத்தை வளர்க்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று அருள்தந்தை Sales மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.