2012-07-04 16:24:33

திருஅவையில் திருப்புமுனைகள் – ஏழைகளில் இயேசுவைக் கண்ட தந்தை பேத்ரோஅருப்பே – பாகம் 1


ஜூலை04,2012. மக்களுக்கு, குறிப்பாக, ஏழைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டவர், தனது சபையினரும் அவ்வாறு செயல்படத் தூண்டியவர், நீதிக்காகத் தன்னை அர்ப்பணித்த ஆழமான ஆன்மீகவாதி, எத்தனை இடர்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டவர், இரண்டாவது இனிகோ, இயேசு சபையின் இரண்டாவது நிறுவுனர் ... என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படுபவர் இயேசு சபை அருள்தந்தை பேத்ரோ அருப்பே (Pedro Arrupe SJ ). இவர், இயேசு சபையின் 28வது அதிபராக, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பின்னர் திருஅவைக்கும் மக்களுக்கும் சேவை செய்வதில் புதிய பாதையில் சுமார் 18 ஆண்டுகள் இயேசு சபையை வழிநடத்தியவர். இறையன்பையும் இறைஇரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட நீதியால் நிறைந்திருந்தவர். கடந்த இரண்டு வாரங்களில் நாம் கேட்ட இயேசு சபை அருள்தந்தையர்கள் தத்துவப்போதகரும், வீரமாமுனிவரும் பிறந்த நாட்டைவிட்டு இந்தியா வந்து இயேசுவின் நற்செய்தியைப் போதித்தவர்கள். அந்தக் காலத்திலே நற்செய்திப்பணியில் ஒரு வித்தியாசமான போக்கைத் துணிச்சலுடன் கையாண்டவர்கள். ஆனால் அருள்தந்தை அருப்பே, கடந்த 20ம் நூற்றாண்டில் புதிய ஒரு பாதையில், “ஏழைகளின் தோழமையில்” என்ற சிந்தனையில் இயேசு சபையை வழிநடத்தியவர். இச்சபையில் தற்போது 19 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மறைப்பணியாற்றி வருகின்றனர்.
1540ம் ஆண்டு புனித இலொயோலா இஞ்ஞாசியார் இயேசு சபையை ஆரம்பித்தார். புனித இஞ்ஞாசியார் பிறந்த இஸ்பெயின் நாட்டு பாஸ்க் (Basque) பகுதியில் Bilbao என்ற நகரத்தில் 1907ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி பிறந்தவர் அருள்தந்தை Pedro de Arrupe y Gondra. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த இவருக்கு நான்கு சகோதரிகள் இருந்தனர். இவரது தந்தை புகழ்பெற்ற பத்திரிகையாளர். Bilbao நகரத்தில் "Gaceta del Norte," என்ற பிரபல்யமான பத்திரிகையைத் தொடங்கியவர்களுள் இவரது தந்தையும் ஒருவர். Bilbao நகரத்தில் பள்ளிப்படிப்பை முடித்த அருப்பே, மத்ரித்தில் மருத்துவக் கல்வியைப் படித்தார். அப்போது Severo Ochoa என்பவரைச் சந்தித்தார். இவர் பின்னாளில் நொபெல் மருத்துவ விருது பெற்றவர். மேலும், உயிரியலில் முன்னோடியாகத் திகழ்ந்த Juan Negrin என்பவர் அருட்பேயின் பேராசிரியர்களில் ஒருவர். இவர் இஸ்பானிய உள்நாட்டுச் சண்டையின் போது பிரதமராக இருந்தவர். இவ்வாறு அருட்பே அவர்களுக்கு இளம்வயதிலே பல அறிவாளர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்துள்ளன. பள்ளியில் திறமையான மாணவராகப் பல பரிசுகளையும் பெற்றிருக்கிறார். மருத்துவத்துறையில் சில ஆண்டுகள் பயிற்சிகள் செய்த பின்னர் 1927ம் ஆண்டு சனவரி 15ம் தேதி புனித இஞ்ஞாசியார் பிறந்த லொயோலாவில் இயேசு சபையில் சேர்ந்தார் அருட்பே. துறவு வாழ்வுக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டுமென்ற தூண்டுதல் வந்ததே ஓர் அற்புத நிகழ்ச்சியின் வாயிலாகத்தான். இந்த இறையனுபவத்தை 1979ம் ஆண்டு இத்தாலியின் அசிசி நகரில் தந்தை அருட்பே அவர்களே விளக்கியிருக்கிறார்.
“எனது தந்தை இறந்த சில வாரங்கள் கழித்து, எனது குடும்பத்தினர் அந்த ஆண்டு கோடை காலத்தை அமைதியாகவும் செபச்சூழலிலும் செலவழிக்க விரும்பினர். அதனால் நாங்கள் லூர்து நகருக்குச் சென்றிருந்தோம். அது ஆகஸ்ட் மாதம். நான் மருத்துவக்கல்லூரி மாணவர் என்பதால் லூர்து நகரில் குணம் பெற விரும்பும் நோயாளிகளின் அருகில் சென்று அங்கு நடப்பவைகளை ஆராய்வதற்குச் சிறப்பு அனுமதி பெற்றிருந்தேன். ஒருநாள் திருநற்கருணை பவனி தொடங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னர் நான் எனது சகோதரிகளுடன் அந்த வளாகத்தில் இருந்தேன். அப்போது நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒரு சக்கரநாற்காலியைத் தள்ளிக்கொண்டு எங்களைக் கடந்து சென்று எங்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். அந்த நாற்காலியில் போலியோவால் பாதிக்கப்பட்ட சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருந்தார். அந்தத் தாய் பக்தியுடன் செபமாலை செபித்துக் கொண்டிருந்தார். நிமிடத்துக்கு நிமிடம் பெருமூச்சு விட்டபடி, புனித கன்னிமரியே எங்களுக்கு உதவும் என்று சொல்லி செபித்துக் கொண்டிருந்தார். ஆயர் திருநற்கருணை கதிர்ப்பாத்திரத்தை கொண்டு வந்த பொழுது அந்தத் தாய் அந்த நாற்காலியை முதல் வரிசையில் வைத்தார். ஆயர் திருநற்கருணை கதிர்ப்பாத்திரத்தால் அந்த இளைஞனைப் பார்த்து சிலுவை வரைந்த அந்த கணப்பொழுதில் அந்த இளைஞன் சக்கரநாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தான். முறுக்கிக் கிடந்த அவனது கால்கள் குணமாயின. அங்கிருந்த கூட்டமே, புதுமை புதுமை என்று மகிழ்ச்சியால் கத்தியது. பின்னர் நானும் அந்த இளைஞனைப் பரிசோதித்தேன். இது உண்மையிலேயே ஆண்டவர் நிகழ்த்திய அற்புதம் என்பதை உறுதி செய்தேன். மத்ரித் பல்கலைக்கழகத்தில் பல புகழ்பெற்ற மருத்துவர்களும் எனது வகுப்புத் தோழர்களும் விசுவாசமின்றி இருந்தனர். புதுமைகள் குறித்துக் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். ஆனால் லூர்து நகரில் திருநற்கருணையில் இயேசு கிறிஸ்து நிகழ்த்திய உண்மையான அற்புதத்தை நானே நேரிடையாகக் கண்டேன். அப்போது நான் அளவற்ற மகிழ்ச்சியால் நிறைந்தேன். நான் இயேசுவின் அருகில் நின்று கொண்டிருப்பதாக உணர்ந்தேன். எல்லாம்வல்ல இறைவனின் வல்லமையை உணர்ந்தேன். என்னைச் சுற்றியுள்ள உலகம் மிக மிகச் சிறியதாக இருப்பதாக உணர்ந்தேன். இந்த உணர்வோடு மத்ரித் திரும்பினேன். எனது பாடப் புத்தகங்கள் எனது கைகளிலிருந்து கீழே விழுந்தன. நான் வழக்கமாக இருப்பது போல் இல்லையே என்று சக மாணவர்கள் கேட்டனர். லூர்து நகரில் உயர்த்திப் பிடிக்கப்பட்ட திருநற்கருணை மட்டுமே எனது கண்முன் இருந்தது. மூன்று மாதங்கள் கழித்து இலொயோலாவிலுள்ள இயேசு சபை நவதுறவியர் இல்லத்தில் சேர்ந்தேன்”.
தந்தை அருப்பே தனது வாழ்நாளில் இப்படிப் பல இறையனுபவங்களைப் பெற்றிருக்கிறார். 1920களில் இஸ்பெயினில் பெரும் பதட்டநிலை உருவானது. மன்னர் மூன்றாம் அல்போன்சோ ஆட்சி கவிழ்க்கப்பட்டார். 1923ம் ஆண்டு சர்வாதிகாரி Primo de Rivera வலுவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றினார். 1930ம் ஆண்டில் மன்னர் நாட்டைவிட்டு வெளியேறும்படி ஆனது. கத்தோலிக்கத்திற்கு எதிரான குழு ஆட்சியில் அமர்ந்தது. இராணுவ அதிபர் Francisco Franco அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டினார். 1933ம் ஆண்டு உள்நாட்டுச் சண்டை தொடங்கியது. அது 1936ம் ஆண்டுவரை நீடித்தது. இஸ்பெயினில் இத்தகைய அரசியல் குழப்பம் இடம்பெற்றதால் இயேசு சபைத் தலைவர்கள், அந்தச் சபையில் புதிதாகச் சேர்ந்த இளம்துறவியரை தொடர்ப் பயிற்சிக்காக பெல்ஜியத்திற்கும் ஹாலந்துக்கும் அனுப்பி வைத்தனர். தந்தை அருப்பே அவர்களும், மற்ற இளம்துறவியரோடு பெல்ஜியத்தின் Marneffeவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதேசமயம், இயேசு சபையினர் அந்த உள்நாட்டுக் கலவரத்தில் இஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆயினும் துணிச்சலுடன் நாட்டிலே தங்கியவர்கள் கொலை செய்யப்பட்டனர். எடுத்துக்காட்டாக, மத்ரித்திலிருந்த இயேசு சபை ஆலயம், வன்முறைக் கும்பலால் தீயிட்டு கொளுத்தப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. முன்னாள் இயேசு சபை அதிபர்களான Lainez, Borja ஆகியோரின் எரிந்த உடல்கள் ஆலயத்தில் கிடந்தன. அந்த அளவுக்கு உள்நாட்டுக் கலவரம் நடந்தது.
1936ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி Marneffeல் தந்தை அருப்பே குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதே ஆண்டில் மருத்துவத்திலும் உளவியலிலும் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களுக்கான அனைத்துலக மனிதஇன மேம்பாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொள்ளவும் தந்தை அருப்பே அனுமதிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டு Kansas லுள்ள இயேசு சபை இறையியல் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். Ohio மாநிலத்தின் Cleveland ல் ஆன்மீக வழிகாட்டியாகவும் இஸ்பானிய குடியேற்றதாரரைக் கவனிப்பதிலும் தன்னை ஈடுபடுத்தினார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மருத்துவ அறநெறியியலில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் 1938ம் ஆண்டு ஜப்பானுக்கு மறைப்பணியாளராக அனுப்பப்பட்டார். தனது வாழ்நாள் முழுவதும் அங்கு பணி செய்யும் நம்பிக்கையுடன் அங்கு சென்றார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. (1939 – 1945)
1941ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஹவாய்த் தீவின் Pearl துறைமுகத்தில் குண்டு வீசப்பட்டபோது ஜப்பானுக்கு அந்நாள் டிசம்பர் 8. அமலமரி பெருவிழாவாகிய அன்று தந்தை அருட்பே, இந்தப் பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது, ஜப்பானியப் படைவீரர்கள் இவரை ஒற்றர் என சந்தேகித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் தூக்கிலிடப்போகும் நாள் நெருங்கி விட்டது என்று மக்கள் யூகித்து, கிறிஸ்மஸ்க்கு முந்திய நாள் அதாவது டிசம்பர் 24ம் தேதி இரவு இவர் சிறையில் இருந்த அறைக்கு வெளியே கூடிநின்று கிறிஸ்மஸ் பாடல்களைப் பயமின்றிப் பாடினர். தந்தை அருட்பே அம்மக்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடல் ஒன்றையும் பாடினர். அந்த அனுபவம் குறித்துப் பின்னர் பகிர்ந்து கொண்ட தந்தை அருப்பே..
“திடீரென எனது அறைக்கு வெளியே முணுமுணுப்பு சப்தம் கேட்டது, மென்மையான கிறிஸ்மஸ் பாடல்கள் ஒலிக்கக் கேட்டேன். இது எனக்கு ஆனந்த அதிர்ச்சியூட்டியது. இதில் நெகிழ்ந்து சப்தம்போட்டு அழுதேன். இந்தக் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு வரும் ஆபத்துக்களுக்கு அஞ்சாமல் என்னைத் தேற்றுவதற்காக வந்ததை நினைத்து மனம் உருகினேன். இந்தக் கிறிஸ்மஸ் பாடல்கள் பாடி முடிக்கப்பட்ட சில நிமிடங்களுக்கு இயேசுவின் பிரசன்னம் குறித்துத் தியானித்தேன். இயேசு விரைவில் கிறிஸம்ஸ் திருப்பலியில் இறங்கிவரப் போகிறார், அவர் எனது இதயத்தில் இறங்கிவரப் போகிறார் என உணர்ந்தேன். அந்த இரவில் நான் அனுபவித்த ஆன்மீக அனுபவம் எனது வாழ்வில் அனுபவித்த சிறந்த ஆன்மீக அனுபவமாக இருந்தது. சிறையில் துன்பங்கள் அனுபவித்த இந்தக் காலம், எனக்கு ஒரு சிறப்பான இறையருளின் காலமாக இருந்தது.
இவ்வாறு எழுதியிருக்கிறார் தந்தை அருப்பே. 33 நாள்கள் கழித்து பாதுகாப்புப் படைவீரர்கள் அவரை விடுதலை செய்ய வந்தபோது, தன்னைத் தூக்கிலிடத்தான் வருகிறார்கள் என்று உறுதியாக நினைத்திருந்தாராம். சிறைவாழ்வில் தனக்கு ஏற்பட்ட அனுபவம், ஓர் ஆழ்ந்த உள்ளார்ந்த அமைதியைக் கொடுத்திருந்தது. அது இறைவனில் தீவிர நம்பிக்கை வைத்ததில் உருவானது” என்றும் அவர் எழுதியிருக்கிறார். தந்தை அருட்பே அவர்களது ஆழ்ந்த செபமும், நல்ல நடத்தையும் சிறைக்காவலர்கள் மற்றும் நீதிபதிகள் மத்தியில் இவருக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தியது. அதனால் ஒரு மாதத்துக்குள் விடுதலை செய்யப்பட்டார். இந்த அனுபவம், தனது ஆன்மீக வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்ததாக அவர் விளக்கியிருக்கிறார்.
1942ம் ஆண்டில் ஹிரோஷிமா புறநகர்ப் பகுதியிலுள்ள இயேசு சபை இல்லத்தின் தலைவராகவும், நவதுறவியர் மற்றும் இளம்துறவியரை வழிநடத்துபவராகவும் நியமிக்கப்பட்டார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா நகருக்கு மேலே பி-29 என்ற அமெரிக்க போர் விமானம் பறந்து கொண்டிருந்த போது அபாயச் சங்கு ஒலித்தது.

இந்நிகழ்ச்சி தொடரும் ....








All the contents on this site are copyrighted ©.