2012-07-03 14:26:21

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 130


RealAudioMP3 ஒரு சகோதரர் திருமணத்திற்குமுன் தகாத உறவுகொண்டு அதன் விளைவாக உருவானக் கருவை அழித்துவிட்டார். இது அவருக்கு குற்றஉணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. பலமுறை ஒப்புரவு அருட்சாதனங்களில், தான் செய்த தவறைச் சொல்லி மன்னிப்பு வேண்டியிருக்கிறார். இருப்பினும் அவருடைய மனதில் அமைதியில்லை, சமாதானமில்லை. “யாரும் இல்லாத அநாதையாக, கவனிப்பாரற்றுக்கிடக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், கல்விக்கும் தொடர்ந்து எதாவது உதவி செய், அது உனக்கு மனநிம்மதியைக் கொடுக்கும்” என்ற குருக்களின் அறிவுரைப்படியும் நடந்துகொண்டார். அப்போதும் அவருக்கு நிம்மதியில்லை. “ஓர் உயிரைக் கொன்றுவிட்டேன் என்ற குற்றஉணர்வு என்னை விட்டுநீங்க இதற்குமேல் என்ன செய்யவேண்டும்? என்ன செய்தால் எனக்கு நிம்மதி கிடைக்கும்” என்று என்னிடம் கேட்டார். “இதற்கு ஒரே மருந்து செபம்தான். இறைவன் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் மனஅமைதியையும், நிம்மதியையும் தரமுடியும். எனவே செபியுங்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர் நானும் அவரில் மட்டுமே நம்பிக்கைக் கொண்டுள்ளேன். அதற்காகத்தான் நாள்தோறும் உருக்கமாகச் செபிக்கிறேன். என்றைக்கு இறைவன் என்னை மன்னிப்பார், நான் எதிர்பார்க்கும் உளஅமைதியைத் தருவார், நான் சீரான வாழ்விற்குத் திரும்புவேன் எனக்காத்திருக்கிறேன் என்று சொன்னார்.

அன்பார்ந்தவர்களே! நாம் இன்று சிந்திப்பது திருப்பாடல் 130. இப்பாடல் மனிதர்களின் முக்கியமான மனநிலையையும், இறைவனின் மன்னிக்கும் பேரன்பையும் பிரதிபலிக்கிறது. இத்திருப்பாடலின் ஒரு பகுதியில், தப்பு செய்துவிட்டு தாங்கள் செய்த காரியத்திற்காக மனம் வருந்தி, இறைவன் தங்களை மன்னிக்கமாட்டாரா எனக் காத்திருக்கும் மனிதர்களின் மனநிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். தப்பு செய்த தன்னை, இறைவன் ஆபத்திலிருந்து காப்பாற்றவேண்டும் என்றல்லாமல் தான் செய்த காரியத்தை மன்னிக்கவேண்டும் என்பது மேலோங்கி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. தப்பு செய்துவிட்டு, இறைவனால் மன்னிக்கப்படமாட்டோமா என காத்திருந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. மனிதர்களாகப் பிறந்த அனைவரும் இதே சூழ்நிலையில் நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இப்பாடலின் மற்றொரு பகுதியில், இறைவனின் மன்னிக்கும் பண்பை தன் அனுபவத்தின் வழியாகச் சொல்கிறார் ஆசிரியர். உலகிலுள்ள எல்லாரையும் மன்னித்து ஏற்றுக்கொள்கின்ற இறைவன் எம்மையும் மன்னித்து ஏற்றுக்கொள்வார், அதற்காக நான் காத்திருக்கிறேன் என்றும் சொல்கிறார்.

உலகில் பொதுவாக இரண்டு வகையான மனிதர்களைப் பார்க்கலாம். முதல் வகையைச் சார்ந்தவர்கள், நாம் தப்பு செய்துவிட்டோம், அது பிறருக்கு தெரிந்துவிட்டது அல்லது செய்த தவறால் பிரச்சனை உருவாகிவிட்டது. எனவே அந்தப் பிரச்சனை எப்போது முடியும், அதிலிருந்து எப்போது வெளிவருவோம் என்று துடித்துக்கொண்டிருப்பார்கள். அந்தப் பிரச்சனை தீர்வதற்கு என்ன செய்யவேண்டும் என சிந்தித்துக் கொண்டேயிருப்பார்கள். அப்பிரச்சனை முடிந்துவிட்டதென்றால் அதை மறந்துவிடுவார்கள். அதன் பிறகு அதேபோன்ற தப்பை மீண்டும் செய்யத் தயங்கமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அப்பிரச்சனையிலிருந்து வெளியே வரவேண்டும். அவ்வளவுதான்.
ஆனால், மற்றொருவகை மனிதர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்கள். தாங்கள் செய்த காரியத்தை நினைத்து மனம் வருந்துவார்கள். இவர்கள் தப்பு செய்தால், மனம் வருந்தவேண்டும், மன்னிப்புப் பெறவேண்டும், மீண்டும் அதே காரியத்தைச் செய்யாமல் இருக்க முயற்சி எடுக்கவேண்டும் என்ற மதிப்பீடுகளின்மேல் வாழ்க்கையைக் கட்டியெழுப்பியவர்கள். இவ்வகை மனிதர்களே இத்திருப்பாடலின் நாயகர்கள். இதோ இப்பாடலின் முதல் இரு சொற்றொடர்கள்
ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.

மிகப்பெரிய தப்பைச் செய்த மனிதர்கள், தாங்கள் செய்தக் காரியத்தை நினைத்து மனம் வருந்துவர். அவர்களுடைய மனவேதனையைச் சொல்வதற்கு வார்த்தையில்லை. இதைத்தான் ஆசிரியர் ஆழ்ந்த துயரம் எனக்குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட மனிதருக்கா நாம் இதைச் செய்துவிட்டோம்? ஏன் இந்தச் செயலைச் செய்தோம்? இதைச் செய்ய எப்படி நமக்கு மனது வந்தது? இதே போன்ற காரியத்தை நமக்குப் பிறர் செய்திருந்தால் நமக்கு எப்படி வலிக்கும்? இதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? மன்னிப்பார்களா? என்ற கேள்வியோடு மனதிற்குள்ளேயே போராடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் செய்த குற்றத்திற்கானத் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராகவும் இருப்பார்கள். அத்தண்டனை முடிந்த பிறகுதான் சற்று நிம்மதியடைவார்கள்.

குழந்தை இயேசுவின் தெரசாள் சிறுபிள்ளையாக இருந்தபோது, அவர்கள் வீட்டுப் படுக்கையறைச் சுவற்றில் மாட்டியிருந்த படத்தைத் தவறுதலாகக் கிழித்துவிட்டாராம். தெரசாவினுடைய இரு அக்காக்களும் பரவாயில்லை, தெரியாமல் நிகழ்ந்துவிட்டது. அப்பா வந்தால் சொல்லிக்கொள்ளலாம், ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்று சொன்னார்களாம். ஆனாலும் சிறுமி தெரசாவோ, சாப்பிடாமல் அப்பாவின் வருகைக்காக காத்திருந்தார். அப்பா மார்ட்டின் வந்ததும் ஓடிச்சென்று அவருடைய கால்களைக் கட்டிக்கொண்டு அழுது, தான் இவ்வாறு படத்தைக் கிழித்துவிட்டதாகச் சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விலகிச்சென்று தண்டனைக்குக் காத்திருக்கும் குற்றவாளியைப்போல் தலைகுனிந்து நின்றாராம்.

தாங்கள் செய்ததை ஏற்றுக்கொண்டு அதற்கான தண்டனை அனுபவித்ததோடு முடிந்துவிடுவதில்லை. ஏனெனில் தவறு செய்தவருடைய மனது, மன்னிப்பு பெறுவதோடு நின்றுவிடாமல், பழையபடி அதே அன்பை, உறவை பெறுவோமா என அடித்துக் கொள்ளும். அப்படியே மன்னிக்கப்பட்டுவிட்டாலும், தப்பு செய்தவர் அவருடைய வருத்தமான மனநிலையிலிருந்து வெளிவருவதற்கு சிறிதுகாலம் எடுக்கும். அக்குறுகிய காலத்தில், பிறர் பார்க்கும் பார்வைகள் எல்லாமே தன்னைச் சந்தேகமாகப் பார்ப்பதைப்போலவே உணர்வார்கள். பழைய அன்பையும், உறவையும் ஏன் அதைவிட மேலான அன்பையும் எதிர்பார்ப்பார்கள். ஒருவேளை அதே பழைய அன்பு கிடைக்கவில்லையெனில், தான் செய்த காரியத்தை மீண்டும் நினைப்பார்கள், வருந்துவார்கள். பழைய அன்பு கிடைத்தாலும், நாம் தப்பு செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமான அன்பு கிடைத்திருக்குமோ என்ற எண்ணமும் அவர்களுக்குள் உருவாகும். பொதுவாகச் சொன்னால், தப்பு செய்த மனிதர்கள் அனைவருமே முழுமையான மன்னிப்பிற்கும், பழையபடியான அன்பிற்கும்தான் காத்திருப்பார்கள்.
பண்பட்ட மனிதர்கள் தவறு செய்தபிறகு இப்படிப்பட்ட மோசமானச் செயலைச் செய்துவிட்டோமே என்று வருந்துவர். அந்நேரத்தில் பலரும் வந்து என்ன செய்வது நிகழ்ந்துவிட்டது. அதையே நினைத்துக் கொண்டிருந்தால் சரியாகிவிடுமா? அதையே நினைத்து இப்படி வருத்திக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடுமா? இனி இப்படி நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டியதுதான். எனவே கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்புமாறு அறிவுரை கூறுவார்கள். ஆனாலும், அவர்களால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாது. அவர்கள் செய்த காரியம் அவர்கள் மனதை அரித்துக்கொண்டேயிருக்கும். எனவே தாங்கள் செய்த மோசமான காரியத்திற்கு ஈடாக பரிகாரம் செய்வார்கள். வழக்கமாக நாம் ஒப்புரவு அருட்சாதனத்தில் கொடுக்கப்படும் பரிகாரங்ளைச் செய்துமுடிக்கும்போது, நமது மனதில் ஒரு நிம்மதி ஏற்படுகிறது. ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைத்ததைப்போன்ற பெருமூச்சு எழுகிறது. அதை நாமும் உணர்ந்திருப்போம். இதற்கு காரணம் என்ன? நாம் செய்த தவறுக்குச் சரியான பரிகாரம் செய்துவிட்டோம். எனவே இனி நாம் செய்த தவறு நம்மைப் பாதிக்காது என்ற நம்பிக்கையே.

இவ்வாறு தாங்கள் செய்த காரியத்திற்கு பரிகாரம் செய்துவிட்டாலும் கூட சிலர் நிம்மதி அடைவதில்லை. ஏனெனில், தாங்கள் செய்த காரியம் அவ்வளவு மோசமானது என்று நினைக்கிறார்கள். அவர்கள் மனதில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த துயரத்தை நீக்கவும், இப்படிப்பட்ட காரியத்தைச் செய்துவிட்டோமே என நினைத்து, நினைத்து அவர்கள் மனதில் ஏற்பட்ட காயம் நீங்கவும் சரியாக மருந்து தேவைப்படுகிறது. அது இறைவனிடம் மட்டுமே உள்ளது எனவும் நினைக்கிறார்கள்.
நாங்கள் செய்யவேண்டியதெல்லாம் செய்துவிட்டோம். இனி எங்கள் கையில் எதுவும் இல்லை. எல்லாம் இறைவன் கையில் என்று மருத்துவர்கள் சொல்வார்களல்லவா? அதேபோல பிறருடைய ஆறுதலும், தாங்கள் செய்த மோசமான காரியத்திற்கு ஏற்றவாறு செய்த பரிகாரமும் அவர்கள் எதிர்பார்க்கும் நிம்மதியைத் தருவதில்லை. இறைவன் மட்டுமே இதுபோன்ற மனிதர்களின் உள்ளத்தைப் புதுப்பிக்கமுடியும். ஏனெனில், அவர் மன்னிக்கும் தெய்வம். பேரன்புமிக்கவர். மனிதருடைய குற்றங்களை அவர் பொருட்படுத்துவதில்லை என்றும் ஆணித்தரமாகச் சொல்கிறார் ஆசிரியர். 3 மற்றும் 4ம் சொற்றொடர்கள்
ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?
நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.

இறைவனுடைய மன்னிக்கும் பண்பை விவிலியத்திலிருந்து அல்லது தங்கள் வாழ்வு அனுபவத்திலிருந்து உணர்ந்திருப்பார்கள் எனக்கருதுகிறேன். ஒருவேளை இறைவன் மனிதர்களுடையக் குற்றங்களை பொருட்படுத்தியிருந்தால், எந்த ஒரு மனிதருக்கும் இறை சந்நிதானத்தில் இடம் இருந்திருக்காது. அவர் மன்னித்தார். ஏற்றுக்கொண்டார். இத்தகைய யாவே இறைவனின் பேரன்பிற்கும், மன்னிப்பிற்கும் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை விவிலியத்திலிருந்து சொல்லலாம். ஆனால் இறைவாக்கினர் ஓசேயாவின் புத்தகத்தில் சொல்லப்படுகிற இஸ்ரயேல் மக்களின் பாவ வாழ்வையும், இறைவனுடைய மன்னிப்பையும் மட்டுமே நான் இன்று குறிப்பிட விரும்புகிறேன். ஓசேயா இறைவாக்கினர் விலைமாதான கோமோர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவளுடைய வாழ்வு திருமணத்தால் ஆசீர்வதிக்கப்பட்டது என்பதை உணராதவள், ஓசேயாவிடமிருந்து பிரிந்து சென்று நம்பிக்கைத் துரோகம் செய்தாள். இதைப் பிண்ணனியாகக்கொண்டு இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார். கடவுளை விட்டு விலகிச் சென்ற அவர்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவார் என்று எச்சரித்தார்.
இதைத்தான் பின்வரும் சொற்றொடர்கள் நமக்குச் சொல்கின்றன. ஓசேயா 4: 7 மற்றும் 5: 15
எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ அவ்வளவுக்கு அவர்கள் எனக்கு எதிராய்ப் பாவம் செய்தார்கள்; அவர்கள் மேன்மையை இகழ்ச்சியாக மாற்றுவேன்.
தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று, என்னைத் தேடி வரும்வரை, நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன். தங்கள் துன்பத்திலே அவர்கள் என்னைத் தேடுவார்கள்.

இவ்வாறு கோபம் கொண்டிருந்த யாவே இறைவன் அவர்களைக் கைவிட்டு விடவில்லை. மாறாக, அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார். அவர் கொண்டிருந்த பேரன்பு, முறிந்த உறவை மலரச்செய்தது. விவிலியம் முழுவதுமே இதேபோன்ற எடுத்துக்காட்டுகள் நிரம்பியிருக்கின்றன. இப்படிப்பட்ட இறைவன் தங்களுடைய பாவ வாழ்க்கையை மன்னிப்பார். அவர்களை ஏற்றுக்கொள்வார் என்று நினைத்தார்கள். எனவே ஆவலோடு ஆண்டவரின் பதிலுக்காய் காத்துகிடந்தார்கள். இதைத்தான் பின்வரும் சொற்றொடர்கள் சொல்கின்றன.
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
எனவே அன்புக்குரியவர்களே! நாம் செய்த மோசமான காரியங்களால் ஏற்பட்டக் குற்றஉணர்வில் வாழத்தேவையில்லை. பிற மனிதர்களின் ஆறுதலிலும், நம்முடைய பரிகாரத்திலும் கிடைக்காத நிம்மதியை, மனஅமைதியை இறைவன் நமக்குத் தருவார், தருவதற்குக் காத்துக்கொண்டிருக்கிறார். எனவே வாருங்கள் நாமும் அவருடைய மன்னிப்பிற்காகக் காத்திருப்போம் எனக்கூறும் திருப்பாடல் ஆசிரியருக்குச் செவிமடுப்போம்.








All the contents on this site are copyrighted ©.