2012-07-03 14:35:08

வியட்நாமில் ஞாயிறு திருப்பலிக்கென கூடியிருந்த கத்தோலிக்கர்கள் தாக்கப்பட்டனர்


ஜூலை03,2012. வியட்நாமின் Con Cuong மாவட்டத்தில் ஜூலை 1ம் தேதி ஞாயிறு திருப்பலிக்கென கூடியிருந்த கத்தோலிக்கர்களை வியட்நாம் நாட்டுப்பற்றுக் கழகம் என்ற பெயர் தாங்கிய குழுவினர் வன்மையாகத் தாக்கினர்.
இஞ்ஞாயிறு மாலை அருள்தந்தை Nguyễn Đình Thuc திருப்பலியைத் துவக்கியதும் இந்த வன்முறை கும்பல் சிற்றாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மக்களைக் கொடூரமாகத் தாக்கியதில் பலர் காயமுற்றனர். Maria Ngo Thi Thanh என்ற பெண் தலையில் பலத்த அடிபட்டு தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Con Cuong மாவட்டத்தில் கத்தோலிக்கர்கள் திருப்பலியையும், மற்ற வழிபாடுகளையும் நடத்துவதற்கு எதிராக அரசு அதிகாரிகள் எச்சரிக்கைகளை விடுத்து வந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் அங்கு கத்தோலிக்கர்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இஞ்ஞாயிறன்று வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசு அதிகாரிகள் பணம் வழங்கினர் என்று பெயர் சொல்ல விரும்பாத சிலர் ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
வியட்நாமில் நிலவும் மதச் சுதந்திரம் பற்றிய சட்டங்களைச் சரிவரத் தெரிந்துகொள்ளாத அரசு அதிகாரிகள் தவறாக நடந்து கொள்கின்றனர் என்று கூறும் கத்தோலிக்கர்கள், இந்த வன்முறைகளைத் தடுக்க Vinh மறைமாவட்ட ஆயர் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று தாங்கள் நம்புவதாகவும் கூறினர்.








All the contents on this site are copyrighted ©.