2012-07-02 15:14:43

வாரம் ஓர் அலசல் – அனைத்துலக மகிழ்ச்சி நாள்


ஜூலை02,2012. வானலை மற்றும் செயற்கைக் கோள் மூலமாக இதோ சில நடப்பு மகிழ்ச்சிச் செய்திகள் ...
இந்த ஜூன் 7ம் தேதி திடீரென கடும் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட எங்களது நண்பர் ஒருவர், மரணத்தின் வாசலைத் தொட்டுவிட்டு, பின்னர் 26 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இத்திங்களன்று நற்சுகத்துடன் வீடு திரும்பினார். அவரின் குடும்பத்தாரும் நண்பர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஜூலை01,2012 ஞாயிறு உக்ரேய்ன் நாட்டு KIEV ஒலிம்பிக் விளையாட்டரங்கில் “யூரோ 2012 கால்பந்து” போட்டியின் இறுதி நாள். நடப்பு சாம்பியன் இஸ்பெயின், இத்தாலியை எதிர்கொண்டது. இதில் இஸ்பெயின் அணி 4-0 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. அத்துடன், 2008 யூரோ, 2010 உலககோப்பை, 2012 யூரோ சாம்பியன் பட்டங்களை வென்று புதிய சாதனையும் படைத்தது. ஜெர்மனிக்கு பிறகு (1972, 80, 96) மூன்று முறை யூரோ பட்டங்களை வென்ற அணி என்ற பெருமையும் இஸ்பெயின் அணிக்குக் (1964, 2008, 2012) கிடைத்துள்ளது. ஞாயிறு இரவு இந்த அணியினர் முகத்திலும் இரசிகர்கள் மத்தியிலும் அப்படியொரு மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது.
ஜூன் 28. சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி. பரமத்தி வேலூர் வட்டத்தில் வெற்றிலை விலை உயர்ந்துள்ளதால், வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி. ஈரோட்டில், மஞ்சளை, அரசு நிறுவனங்களே கொள்முதல் செய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி. கோடை வெயில் கொளுத்தும் தருணத்திலும், மணிமுக்தா ஆற்றில் வற்றாமல் நீரோட்டம் இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி......
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று குத்துச்சண்டைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங், இலண்டன் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்காக முனைப்புடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்லியுள்ளார். லியாண்டர் பயசுடன் இணைந்து விளையாடவுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
அன்பு நெஞ்சங்களே, ஒரு வாரத்தில் உலக நடப்புச் செய்திகளை வாசிக்கும் போது, கொலை, கொள்ளை, ஏமாற்று, பதவிப்பறிப்பு, கோஷ்டிப்பூசல் போன்ற செய்திகள் மத்தியில், மக்கள் மகிழ்ச்சியடையும் நிகழ்வுகளும் இடம் பெறுவது நமக்கும் மகிழ்ச்சியளிக்கின்றன. மனமகிழ்ச்சிதான், மனிதரை நோய் நோக்காடின்றி, சண்டை சச்சரவுகளின்றி, நல்லிணக்கத்தோடு அமைதியாய் வாழ வைக்கின்றது. எங்கு வன்முறைகளும், பசி பட்டினிகளும் மக்களை வாட்டுகின்றனவோ அவ்விடங்களில் மகிழ்ச்சியைக் காண முடியவில்லை. இன்றைய உலகுக்கு இந்த மகிழ்ச்சி உணர்வு அதிகமாகவே தேவைப்படுகின்றது. இந்த வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சித் தொடரிலும் நமது வத்திக்கான் வானொலிச் செய்திகளிலும் பல அனைத்துலக நாள்கள் பற்றி விவரித்து வருகிறோம். இந்த நாள்களை உருவாக்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, ஜூன் 28, கடந்த வியாழக்கிழமையன்று அனைத்துலக மகிழ்ச்சி நாளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மகிழ்ச்சி நாள், ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்தது. ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளும் இதற்கு ஒரே மனதாய் இசைவு தெரிவித்தன. ஐ.நா.வுக்கான ஈராக்கின் நிரந்தரப் பிரதிநிதி Dr. Hamid Al-Bayati, ஐ.நா.பொது அவைத் தலைவர் Nassir Abdulaziz Al- Nasser, ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் போன்றோர் இந்த நாள் உருவாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுத்தனர். இந்த நாள் குறித்த தீர்மானத்தை அறிவித்துப் பேசிய Nassir Abdulaziz Al- Nasser...
உலகில் மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஊக்குவிப்பதே இந்த அனைத்துலக நாளின் முக்கிய நோக்கமாகும். உலகினர் அனைவரும் மகிழ்ச்சி என்ற விழுமியத்தின் மதிப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த மகிழ்ச்சி, பொருளாதார ரீதியான வளத்தையும் கடந்தது. அனைவரும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலில் பாகுபாடற்று வளம் பெற வேண்டும்
சாதாரணமாக, சிலரிடம் செல்வம் குவிந்து கிடப்பதையும், பலரிடம் வறுமை மலிந்து கிடப்பதையும் காண்கிறோம். ஆனால் பல செல்வந்தர்களது அல்லது செல்வாக்குடன் வாழும் பலரது வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியைக் காண முடியவில்லை. அதேநேரம், பல வறியவர் மத்தியில் மகிழ்ச்சியைக் காண முடிகின்றது. எனவே மகிழ்ச்சிக்கும் பணத்துக்கும் பதவிக்கும் தொடர்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் மகிழ்ச்சியை எப்படிப் பெறுவது? அது எங்கே கிடைக்கும்? அதை விலைகொடுத்து வாங்க முடியுமா? இதற்குப் பல பெரியோர்கள் சில வழிகளைச் சொல்கிறார்கள். ஏன், வத்திக்கான் வானொலி நேயர்களாகிய நீங்கள்கூட சிலவழிகளைச் சொல்வீர்கள். இஞ்ஞாயிறன்று கோவில்பட்டியில் நடந்த விரைவு நீதிமன்றத் திறப்பு விழாவில் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி இராஜேஸ்வரன் ஒரு வழியைச் சொல்லியிருக்கிறார். “பொதுவாக குறையில்லாத மனிதர் இருப்பதில்லை; எனவே குறை கூறிக்கொண்ட இருக்கும் மனிதவாழ்வு சிறப்பதில்லை; மாறாக ஒவ்வொருவரும் தங்களுடைய குறைகளை உணர்ந்து மாற்றிக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும்” என்று அவர் கூறியிருக்கிறார். கோவில்பட்டி பகுதியில் நிலுவையிலுள்ள சுமார் 410 காசோலை மோசடி வழக்குகளை விசாரிப்பதற்காக இந்த நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது எனத் தினத்தாள்களில் வாசித்தோம்.
ஒவ்வொருவரும் தங்களது குறைகளைத் திருத்திக் கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று சொல்கிறார் இராஜேஸ்வரன். Henrik Edberg என்பவர் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு ஏழு வழிகளைப் பரிந்துரைக்கிறார். கடந்த 2,500 ஆண்டுகள் வரலாற்றில் சான்றோரது கூற்றுக்களிலிருந்து இந்த ஏழு வழிகளைத் தான் கற்றதாகச் சொல்கிறார்.
1. நீங்கள் சிறிய பொருட்களில், சிறிய நிகழ்வுகளில் மகிழ்ச்சி காணலாம். ஒரு நாளில் நடக்கும் நிகழ்ச்சியை நேர்மறையாக நோக்குவதில் மகிழ்ச்சி காணலாம். எனவே உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தையும் நீங்கள் எந்தநிற மூக்குக் கண்ணாடியால் நோக்குகிறீர்கள் என்பதைப் பொருத்து உங்களது மகிழ்ச்சி வாழ்வும் அமையும். ஆபிரகாம் லிங்கன் சொன்னதைப் போன்று, ஒருவரது மகிழ்ச்சி அவரது மனநிலையைப் பொருத்ததாகும். ஆம். உங்களது மகிழ்ச்சி நீங்கள் எதைத் தேர்ந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. மகிழ்ச்சி வெளியே இல்லை. அது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது. எனவே அகத்தில் இருப்பதை புறத்தில் தேடுவது அறிவீனம்.
2. மகிழ்ச்சியின் ஒரு கதவு மூடும் பொழுது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் திறந்த கதவைப் பார்க்காமல் மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று ஹெலன் கெல்லர் சொன்னார். எனவே மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் நிகழ்காலத்தில் வாழ வேண்டும். உங்களுக்கு இந்தப் பொழுது மட்டுமே நிஜம். கடந்த காலம் ஒரு நினைவுதான். வருங்காலம் ஒரு கனவுதான். எனவே மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் நிகழ்காலத்தில் வாழுங்கள்.
3. பொதுவாக மனிதர் எப்பொழுதும் தங்களது துன்பங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிகளைக் கணக்கில் எடுக்க மாட்டார்கள். ஆதலால் நாம் எப்பொழுதும் நன்றி நிறைந்த மனத்தோடு, நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் நல்ல மனிதரையும், நல்லசெயல்களையும், இயற்கையையும் என அனைத்தையும் நினைத்து நன்றி சொல்லி வாழ்வது மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி அமைக்கும். நன்றி நிறைந்த உள்ளம் மகிழ்ச்சியின் உறைவிடம்.
4. கொடுப்பதில் இன்பம் இருப்பதால் கொடுங்கள். அச்சமயத்தில் பிறர் அடையும் மகிழ்ச்சியைப் பாருங்கள். எனவே பிறரை மகிழ்விக்கும் போது உங்களுக்கும் அந்தப் பலன் கிடைக்கிறது. Bernard Meltzer சொல்வது போல, மகிழ்ச்சி, அன்புமுத்தம் கொடுப்பது போன்றது.
5. பணக்கார மனிதர் பலர் சில்லரைத்தனமான காரியங்களில் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள் என்று Henry David Thoreau சொன்னார். எனவே மதிப்புக்குறைவான காரியங்களிலும், கீழ்த்தரமான செயல்களிலும் இதயத்தைப் பறிகொடுக்காதீர்கள்.
6. வெற்றி, மகிழ்ச்சிக்கான கருவி அல்ல, மாறாக, மகிழ்ச்சிதான் வெற்றிக்கான கருவி. ஆதலால் நீங்கள் உள்ளார்ந்த விருப்பத்துடன் செய்யும் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
7. ஏதாவது ஒரு நல்ல காரியமாவது செய்யுங்கள். அதில் கிடைக்கும் மனமகிழ்ச்சியே அலாதிதான்.
அன்பர்களே, வாழ்க்கை என்பது, முள்ளில் ஒட்டிக் கொண்டிருக்கும் தேனை வாயினால் வெகு எச்சரிக்கையுடன் உறிஞ்சி விழுங்குவதுதான். சற்றுக் கவனக்குறைவாக வாயை வைத்து உறிஞ்சினாலும் முள் வாயைக் குத்தி வேதனைப்படுத்தி விடும். அவ்வாறு எச்சரிக்கையுடன் தேனை உறிஞ்சிக் குடிக்காவிட்டாலும் நாம் உயிர் வாழ முடியாது. இந்த வாழ்க்கைப் பயணத்தில் எந்தப் பாதையும் கவலை எனும் முட்புதர்கள் இன்றி மிருதுவானதாக இருக்காது. அதிலே பள்ளங்களும் படுகுழிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டித்தான் ஆக வேண்டும். இந்தத் தாண்டுதலைச் சிலர் நேர்மறை எண்ணங்கள் என்கிறார்கள். அப்துல்ரஹீம் போன்றோர் சிரிப்பு என்கிறார்கள். வள்ளுவரும், இடுக்கண் வருங்கால் நகுக என்றுதான் சொன்னார். இறுதி முகலாயப் பேரரசர் பஹதூர்ஷாவின் மனத்தைப் புண்படுத்தி அவரை அடிபணிய வைக்க வேண்டும் என்று ஓர் ஆங்கிலேயத் தளபதி விரும்பினார். அதனால் பஹதூர்ஷாவின் இரண்டு மகன்களையும் கொன்று அவர்களின் தலைகளை ஒரு பீங்கான் பாத்திரத்தில் வைத்து மூடி அதை பஹதூர்ஷாவுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். ஆனால் பஹதூர்ஷா அதனைத் திறந்து பார்த்து கலகலவெனச் சிரித்தாராம். எனது மனத்தை துன்புறுத்துவதற்காக இவ்விதம் செய்துள்ளார் தளபதி. அவரது விருப்பம் வெற்றியடைய நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று கூறி மறுபடியும் கலகலவெனச் சிரித்தாராரம் பஹதூர்ஷா.
நாமும் நம்மை வீழ்த்தவரும் துன்பங்களைக் கண்டு சிரித்து அவற்றைத் தோற்கடிப்போம். அப்போது நமது இதயம் இலேசானதாகி மகிழ்ச்சியால் நிரம்பும். “இலேசான இதயம் நெடுநாள் வாழும்” என்று ஷேக்ஸ்பியரும் சொன்னார். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும். இந்தச் சிரிப்பு நமது ஈரல், இதயம், வயிறு ஆகியவற்றை ஒரு குலுக்கு குலுக்கி விடுகின்றது. அந்த வீட்டுத் தாய் கவலை, ஏக்கத்தால் போதுமான தூக்கமின்றி, மெலிந்து துரும்பாகிக் கொண்டிருந்தார். சாப்பாடும் செரிக்கவில்லை. ஆனால் ஒருநாள் அத்தாயே இந்த நிலையிலிருந்து மீண்டு வருவதென ஒரு முடிவுக்கு வந்தார். அன்றிலிருந்து தனக்குச் சிரிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தினமும் குறைந்தது மூன்றுமுறையாவது மனம்விட்டுச் சிரித்து மற்றவரோடு நன்றாக பழகி வந்தார். அவரது கணவரும் வேலை முடிந்து வந்த பின்னர் தனது மனைவியிடம் இன்று எத்தனை முறை சிரித்தாய் என்று கேட்க, உடனே இருவரும் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினார்கள். இப்பழக்கம் அக்கம்பக்கத்திலும் பரவியது. அக்குடும்பம் நோய் நீங்கி கவலையின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது.
வாழ்க்கை, மலராத ரோஜாவின் நம்பிக்கை போன்றது என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ்,. மலராத ரோஜா மலருவோம் என்று நம்புகிறது. அந்த ரோஜா மலர்ந்தவுடன் சிரிக்கிறது. இல்லை. அது சிரிப்பாகவே மலர்கிறது. மலர்கள் வாழ்வது சிலமணி நேரமே என்றாலும்கூட அவை சிரித்துக்கொண்டே வாழ்கின்றன. சிரிப்பே அவற்றின் வாழ்க்கையாக இருக்கிறது. ரோஜாவில் முள் இருந்தாலும் அது மலர்கிறது. மலர்ச்சி என்பது மகிழ்ச்சி. மனிதரின் இலட்சியமும் மகிழ்ச்சியே. மலர் மலரும் போது மற்றவரைக் கவர்ந்திழுக்கிறது. ஆயினும் அது தனக்காக மலர்வதில்லை. அது மலர்ந்ததும் வாசனையால் வண்டை இழுக்கிறது. தேனைத் தருகிறது. அதுபோல பிறருக்காக வாழ்வதே வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் பிறருக்கு மகிழ்வைத் தரும் மனிதர் தானும் மகிழ்ச்சியடைகிறார். எனவே பிறர் வாழத் தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வோடு வாழ வைப்போம். கொண்டாடுவோம் அனைத்துலக மகிழ்ச்சி நாளை.








All the contents on this site are copyrighted ©.