2012-07-02 15:13:58

திருப்பீடப் பேச்சாளர்: வழிபாட்டுக்காகக் கூடியிருக்கும் மக்களை வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காக்குவது சொல்லுதற்கரிய தீமை


ஜூலை,02,2012. வழிபாட்டுக்காக அமைதியுடன் கூடியிருக்கும் மக்களை வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காக்குவது சொல்லுதற்கரிய தீமை என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி கூறினார்.
இஞ்ஞாயிறன்று கென்யாவின் வடபகுதியில் உள்ள Garissa எனுமிடத்தில் ஒரு கத்தோலிக்கக் கோவிலும், மற்றொரு கிறிஸ்தவக் கோவிலும் தாக்குதல்களுக்கு உள்ளானதில் 17 பேர் இறந்துள்ளனர், 60க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.
இது குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் அருள்தந்தை லொம்பார்தி, இவ்வகை தாக்குதல்கள் கொடுமையானவை என்றும், ஆழ்ந்த கவலையை உருவாக்குகின்றன என்றும் கூறினார்.
தாக்குதல்களுக்கு உள்ளான மக்களுடன் உள்ளத்தாலும், செபத்தாலும் நாம் ஒன்றித்திருப்பதோடு, இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு உரிய மத உரிமைகளைக் காப்பதும் அவசியம் என்று எடுத்துரைத்தார்.
சோமாலியா, கென்யா நாடுகளில் நிரந்தர அமைதி உருவாக, தேவையான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்திய அருள்தந்தை லொம்பார்தி, மதங்களுக்கிடையே வன்முறைகளைத் தூண்டும் அனைத்து சக்திகளையும் தடுக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.