2012-07-02 15:13:04

கிறிஸ்துவின் உடலை ஒவ்வொரு நாளும் திருப்பலியில் தொடும் அரிய வாய்ப்பு பெற்றவர்கள் திருப்பணியாளர்கள் - கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே


ஜூலை,02,2012. வாழ்வின் ஊற்றாக திருநற்கருணையில் இருக்கும் இயேசுவைப் புகழ்ந்து புனித தாமஸ் அக்வினாஸ் பாடிய பாடல் இன்றும் நமக்குப் பொருளுள்ளதாய் விளங்குகிறது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே கூறினார்.
புனித தாமஸ் அக்வினாஸ் பாப்பிறை கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தின் நிறைவுத் திருப்பலியை இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் நிறைவேற்றிய கர்தினால் பெர்தோனே, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இயேசு வாழ்வின் மொத்த வடிவமாக விளங்கியதால், அவரது ஆடைகளின் ஓரங்களைத் தொட்டாலும் நாம் வாழ்வடையலாம் என்பதை இஞ்ஞாயிறு நற்செய்தி நமக்குச் சொல்லித்தருகிறது என்று கூறிய கர்தினால் பெர்தோனே, கிறிஸ்துவின் உடலை ஒவ்வொரு நாளும் திருப்பலியில் தொடும் அரிய வாய்ப்பு பெற்றவர்கள் திருப்பணியாளர்கள் என்று எடுத்துரைத்தார்.
“அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று தொழுகைகூடத் தலைவன் யாயிருக்கு இயேசு கூறிய வார்த்தைகளை, அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 2000மாம் ஆண்டு மில்லேன்னியச் செய்தியாக வழங்கினார் என்பதையும் சுட்டிக்காட்டிய கர்தினால் பெர்தோனே, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ள விசுவாச ஆண்டு நமது விசுவாசத்தைத் தளராமல் காக்கும் ஒரு நல்ல தருணம் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.