2012-07-02 15:13:45

கிறிஸ்துவத் திருமறை பிறந்து, வளர்ந்த இடங்கள் வெறும் கண்காட்சித் தலங்களாக மாறிவிடும் ஆபத்து


ஜூலை,02,2012. கிறிஸ்துவத் திருமறை பிறந்து, வளர்ந்த இடங்களிலிருந்து கிறிஸ்தவர்கள் விரட்டப்பட்டால், அது நமது திருமறை என்ற உடலில் ஆழமான காயத்தை ஏற்படுத்தும் என்று வியென்னா கர்தினால் Christoph Schönborn கூறினார்.
"மத்திய கிழக்குப் பகுதியில் துன்புறும் கிறிஸ்தவர்கள்: பிரச்சனைக்குத் தகுந்த தீர்வு" என்ற தலைப்பில் அமெரிக்காவின் வாஷிங்கடனில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசிய கர்தினால் Schönborn, கிறிஸ்துவத்தின் பிறப்பிடமான புனித பூமியிலிருந்தும், அதன் சுற்றுப்புறங்களில் இருந்தும் கிறிஸ்தவர்கள் வெளியேற்றப்பட்டால், இப்பகுதிகள் பயணிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் வெறும் கண்காட்சித் தலங்களாக மாறிவிடும் என்றும் எச்சரித்தார்.
2003ம் ஆண்டு முதல் ஈராக் நாட்டிலிருந்து 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வெளியேறியுள்ளனர் என்றும், அண்மைய அரேபியப் புரட்சிகளின் பின்னர் சிரியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் இதே நிலை உருவாகி வருகிறது என்றும் அரசியல் கண்காணிப்பாளர்கள் கூறிவருவதாக CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சவூதி அரேபியாவில் பல்வேறு பணிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் 10 இலட்சத்திற்கும் அதிகமாய் உள்ளனர் என்று கூறிய கர்தினால் Schönborn, இவர்கள் அனைவரும் மத உரிமைகள் ஏதுமின்றி வாழ்கின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்.
சவூதி அரேபியாவுடன் பல வழிகளில் நல்லுறவு கொண்டிருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடு, கிறிஸ்தவர்களுக்கும் பிற சிறுபான்மை மதத்தினருக்கும் உரிய மத உரிமைகளை வழங்க அந்நாட்டை வற்புறுத்த வேண்டும் என்று வியென்னா கர்தினால் கேட்டுக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.