2012-06-30 15:41:37

அருள்தந்தை லொம்பார்தி : Pallium ஒன்றிப்பின் அடையாளம்


ஜூன்30,2012. புதிய பேராயர்கள் திருத்தந்தையிடமிருந்து பெற்றுள்ள Pallium என்ற கழுத்துப்பட்டை, திருத்தூதர்களின் தலைவரைப் பின்செல்பவரோடு கொண்டிருக்கும் ஒன்றிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அருள்தந்தை லொம்பார்தி, திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா, பவுல் போன்று உரோமையிலிருந்து இப்பூமியின் இறுதி எல்லைவரை இப்புதிய பேராயர்கள் நற்செய்தி அறிவிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இவ்வெள்ளியன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் நடைபெற்ற இப்பெருவிழாத் திருப்பலி, கிறிஸ்தவ ஒன்றிப்பை வெளிப்படுத்துவதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்திருப்பலியில், இலண்டன் Westminster ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையின் பாடகர் குழு, வத்திக்கான் பாடகர் குழுவுடன் இணைந்து திருப்பலிப் பாடல்களைப் பாடியது. மேலும், Constantinople ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தலைவரின் பிரதிநிதிகளும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுகள், கிறிஸ்தவ சபைகள், கிறிஸ்தவ ஒன்றிப்பில் வளர்வதற்கான ஆவலை வெளிப்படுத்துபவைகளாக இருந்தன என்று அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.