மதத்தின் அடிப்படையில் துன்புறுவோரைக் காப்பது திருஅவையின் கடமை - அமெரிக்கப் பேராயர்William Lori
ஜூன்,29,2012. மத உரிமையைப் பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டின் நலனுக்கும் அவசியம் என்றும்,
மதத்தின் அடிப்படையில் துன்புறுவோரைக் காப்பது திருஅவையின் கடமை என்றும் அமெரிக்கப் பேராயர்
ஒருவர் கூறினார். மத உரிமைகளின் கண்காணிப்பு என்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஓர்
அமைப்பின் முதல் கூட்டம் உரோமையில் இவ்வியாழனன்று நடத்தப்பட்டது. அமெரிக்க ஆயர் பேரவையின்
மத உரிமைகள் பணிக்குழுவின் தலைவரான பேராயர் William Lori இக்கூட்டத்தில் உரையாற்றியபோது
இவ்வாறு கூறினார். அமெரிக்க அரசு தற்போது வலியுறுத்தி வரும் நலக்காப்பீட்டுத் திட்டம்
மத உரிமைகளுக்கும், மனசாட்சிக்கும் எதிராக அமைந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பேராயர்
Lori, பல்வேறு நாடுகளிலும் மத உரிமைகள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும்
எடுத்துரைத்தார். கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்ற விருதுவாக்குடன் உருவாக்கப்பட்ட
அமெரிக்க அரசியல் சட்டங்கள் தற்போது கடவுளுக்கும், மத நம்பிக்கைக்கும் எதிராக இருப்பது
நாட்டின் நலனுக்கு ஆபத்தை உருவாக்கியிருப்பதுபோல், பல நாடுகளிலும் மத உரிமைகள் மீறப்படுவது
அடிப்படை மனித வாழ்வுக்கு பெரும் ஆபத்து என்பதை பேராயர் வலியுறுத்திக் கூறினார்.