2012-06-29 15:41:35

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று திருத்தந்தை வழங்கிய மூவேளைச் செப உரை


ஜூன்,29,2012. கலிலேயக் கடல் பகுதியில் வாழ்ந்த ஓர் எளிய மீன்பிடித் தொழிலாளரும், புறவினத்தாரின் திருத்தூதரும் உரோம் நகரின் வரலாற்றில் ஆழமாய் பதிந்த இரு பெரும் நாயகர்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஜூன் 29, இவ்வெள்ளியன்று கொண்டாடப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளைச் செப உரை வழங்கியத் திருத்தந்தை, இவ்விருப் புனிதர்களும் திருஅவையின் ஒன்றிப்புக்கு மாபெரும் அடையாளங்கள் என்று கூறினார்.
புனித பேதுருவின் தியாகத்திற்கு ஒரு சிறந்த நினைவுச் சின்னமாக இப்புனித பேராலய பசிலிக்காவும், நாம் நின்றுகொண்டிருக்கும் சதுக்கமும் விளங்குகிறது, அதேபோல், புனித பவுலின் வாழ்வுக்கும், தியாகத்திற்கும் சாட்சியாக உரோம் நகரின் புறப்பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் பசிலிக்கா அமைந்துள்ளது என்பதைத் திருத்தந்தை தன் உரையில் மகிழ்வுடன் சுட்டிக்காட்டினார்.
இவ்விரு புனிதர்களின் நினைவுகள் நினைவுச் சின்னங்களில் மட்டும் இருந்துவிடாமல், நமது மனங்களிலும் நிலைத்திருக்கவேண்டும் என்றும், அவர்கள் காட்டிய நற்செய்தி வழியில் நாமும் நடக்க அவர்களின் பரிந்துரை நமக்குத் தேவை எனவும் திருத்தந்தை கூறினார்.
மூவேளை செப உரையின் இறுதியில் இப்பெருவிழாவன்று Pallium என்ற கழுத்துப்பட்டையைப் பெற்ற பேராயர்களைச் சிறப்பாக வாழ்த்திய திருத்தந்தை, இப்பேராயர்களுடன் இணைந்து இவ்விழாவில் பங்கேற்க பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த விசுவாசிகளையும் சிறப்பாக வாழ்த்தினார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.