2012-06-28 15:38:08

எகிப்தின் புதிய அரசுத்தலைவர் கத்தோலிக்க ஆயர்களைத் தன் அரசு மாளிகையில் சந்தித்தார்


ஜூன்,28,2012. எகிப்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதன் அடையாளங்கள் தெரிகின்றன என்று எகிப்து கத்தோலிக்கத் திருஅவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் கூறினார்.
எகிப்தின் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Mohammed Morsi, இப்புதன் காலையில் கத்தோலிக்க ஆயர்களைத் தன் அரசு மாளிகையில் சந்தித்ததைத் தொடர்ந்து, தலத் திருஅவையின் சார்பில் பேசிய அருள்தந்தை Rafiq Greiche இவ்வாறு கூறினார்.
அரசுத்தலைவர் Morsi இச்செவ்வாயன்று காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவர்களைச் சந்தித்தார் என்றும், இப்புதனன்று கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்களைச் சந்தித்தார் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்தது.
ஆயர்களுடன் அரசுத்தலைவர் மேற்கொண்ட இந்தச் சந்திப்பில், கத்தோலிக்கத் திருஅவை எகிப்தில் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாகவும், அனைத்து கிறிஸ்தவர்களும் அமைதியில் வாழும் வழிகளை அமைத்துத் தருவதாகவும் அரசுத் தலைவர் Morsi கூறினார் என்று கூறப்படுகிறது.
கத்தோலிக்க ஆயர்களுடன் அரசுத் தலைவர் மேற்கொண்ட இச்சந்திப்பு ஆயர்களால் திட்டமிடப்பட்டது அல்ல என்றும், அரசுத் தலைவரே இந்த அழைப்பை விடுத்தார் என்றும் அருள்தந்தை Greiche எடுத்துரைத்தார்.
அரசுத் தலைவர் போட்டியில் இஞ்ஞாயிறன்று 52 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற Mohammed Morsi, 'இஸ்லாமியருக்கு மட்டுமல்ல, அனைத்து எகிப்தியர்களுக்கும் அரசுத் தலைவராகப் தான் பணிபுரிவேன்' என்பதைத் தன் தேர்தல் பிரச்சாரங்களில் கூறிவந்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.