2012-06-27 17:02:24

'புறவினத்தார் முற்றம்' என்ற அமைப்பு நடத்திவரும் கூட்டத்தில் கர்தினால் Jean-Louis Tauran


ஜூன்,27,2012. Diplomacy என்று சொல்லப்படும் பக்குவமான, பத்திரமான நடத்தையும், உண்மையும் இணைந்து போவது கடினம் என்று இவ்வுலகம் கருதும் வேளையில், இவ்விரு எண்ணங்களையும் இணைத்து நாம் சிந்திப்பது பொருத்தமானது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மற்ற மதங்களுடன் உரையாடலை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக, 'புறவினத்தார் முற்றம்' என்ற அமைப்பு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு கருத்துக்களில் கூட்டங்கள் நடத்திவரும் இவ்வமைப்பு, தற்போது உரோம் நகரில் 'பக்குவமான நடத்தையும் உண்மையும்' ("Diplomacy and truth") என்ற தலைப்பில் நடத்திவரும் கூட்டத்தில் பேசிய மதங்களுக்கிடையேயான உரையாடல்கள் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, பக்குவமான நடத்தையும், உண்மையும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்று எடுத்துரைத்தார்.
அதிகார அமைப்புக்களின் தரப்பில் செயலாற்றும் பலரை நாம் Diplomat என்று அழைக்கிறோம். இவர்கள் பாதுகாப்பான, பக்குவமான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், இவர்களால் உண்மையாக நடந்து கொள்ள முடியாது என்பது உலகில் பரவியுள்ள எண்ணம் என்று விளக்கிய கர்தினால் Tauran, இந்தப் பொறுப்பில் இருப்பவர்களும் உண்மையை உரைக்கவேண்டும் என்ற எச்சரிக்கை இரண்டாம் உலகப் போரின்போது நமக்கு வழங்கப்பட்டது என்று எடுத்துரைத்தார்.
பக்குவமான நடத்தை உண்மைக்கும், மனசாட்சிக்கும் எதிராக நடப்பது என்ற தவறான கருத்தைக் களைந்து உண்மையின் பக்கம் சார்ந்திருப்பதே அதிகார அமைப்புக்களைக் காக்கும் என்று கர்தினால் Tauran தன் உரையில் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.