2012-06-27 17:02:49

நைஜீரிய ஆயர்கள் - மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதே அரசின் தலையாயக் கடமை


ஜூன்,27,2012. மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதே அரசின் தலையாயக் கடமை என்று நைஜீரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
Boko Haram என்ற அடிப்படைவாதக் கும்பலால் நைஜீரியாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளால் அப்பாவி பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் பலியாவதை அரசும், இராணுவமும் உடனடியாக நிறுத்த தீவிர முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று நைஜீரிய ஆயர்கள் பேரவை அறிக்கை ஒன்றை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
குண்டு வெடிப்புகளாலும், ஏனையத் தாக்குதல்களாலும் எப்பாவமும் அறியாத கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர் என்று கூறும் இவ்வறிக்கை, இவ்வாறு கொல்லப்படுவதில், பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் என்று சுட்டிக்காட்டுகிறது.
சீரிய சிந்தனையுள்ள இஸ்லாமியத் தலைவர்களும் இந்தத் தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுத்திருப்பது தங்களுக்கு உறுதியளிக்கிறது என்று கூறும் ஆயர்கள், வெறும் பேச்சளவில் நம் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதால் மட்டும் இந்தப் பிரச்சனைத் தீராது என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.
ஒப்புரவையும், அமைதியையும் தாங்கள் இந்நாட்டில் தொடர்ந்து தங்கள் மறையுரைகளில் கூறி வருகிறோம் என்றாலும், இவற்றை உறுதி செய்யும் செயல்பாடுகளை அரசு எடுக்காதபோது, நாங்கள் பேசுவது எல்லாம் பொருளற்றதாகிவிடுகிறது என்று ஆயர்கள் தங்கள் வருத்தத்தை இவ்வறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.