2012-06-27 17:02:34

திருப்பீடக் கலாச்சார அவையும், உயிரைப் பேணும் தண்டுவட ஆய்வு அறக்கட்டளையும் இணைந்து உருவாக்கியுள்ள முக்கிய நூல்


ஜூன்,27,2012. திருப்பீடக் கலாச்சார அவையும், உயிரைப் பேணும் தண்டுவட ஆய்வு அறக்கட்டளையும் (The Stem for Life Foundation) இணைந்து உருவாக்கியுள்ள ஒரு முக்கிய நூல் இப்புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களிடம் வழங்கப்பட்டது.
மனிதத் தண்டுவடத்திலிருந்து உயிரணுக்களை எடுத்து அவைகளைக் கொண்டு எவ்விதம் உயிர்களைக் காக்கமுடியும் என்ற ஆய்வில் திருப்பீடம் ஆர்வம் காட்டி வந்துள்ளது.
உயிரைப் பேணும் இந்த ஆய்வுகளை உற்சாகப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு வத்திக்கானில் நடத்தப்பட்ட அனைத்துலகக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட எண்ணங்கள் இந்நூலில் பதியப்பட்டுள்ளன.
மனித உடலைப் படிப்படியாகச் செயலிழக்கச் செய்யும் புற்றுநோய், Alzheimer’s எனப்படும் மூளை தொடர்பான நோய், Lou Gehrig எனப்படும் நோய், முடக்குவாதம் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் தண்டுவட உயிரணு ஆய்வுகளில் தெரிய வரும் என்று இந்நூல் தெளிவாக்குகின்றது.
திருப்பீடக் கலாச்சார அவையின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான பேரருள்தந்தை Tomasz Trafny, அறிவியலும் மதமும் பொருளுள்ள உரையாடலில் ஈடுபட முடியும் என்பதற்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.
பேரருள்தந்தை Trafnyம், உயிரைப் பேணும் தண்டுவட ஆய்வு அறக்கட்டளையின் இயக்குனர் Max Gomezம், NeoStem எனப்படும் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் Robin Smithம் இப்புதனன்று திருத்தந்தையைச் சந்தித்து இந்நூலை அவரிடம் அளித்தனர்.
இந்நூல் இவ்வாண்டின் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.