2012-06-27 17:01:08

திருத்தந்தையின்
புதன்
பொது
மறைபோதகம்


ஜூன்,27,2012. மேமாதம் இருவேறு நாட்களில் நிலநடுக்கங்களுக்கு உள்ளான Emilia Romagna பகுதிகளை இச்செவ்வாயன்று பார்வையிட்டு, அங்குள்ள மக்களுக்குத் தன் ஆறுதலான வார்த்தைகளையும், செபங்களையும் வழங்கியத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதன் காலை 10.30 மணியளவில் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் தன் வழக்கமான புதன் பொது மறைபோதகத்தை வழங்க வந்திருந்தார். அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரமான வரவேற்பை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, புனித பவுல் அடிகளார் செபத்தைப்பற்றிக் கூறும் எண்ணங்களை கடந்த வாரங்களில் சிந்தித்து வந்துள்ளோம். அவ்வெண்ணங்களின் தொடர்ச்சியாக, இன்று பவுல் அடிகளார் பிலிப்பியருக்கு எழுதியத் திருமுகத்தில் எழுதியுள்ள புகழ் பெற்றதொரு பகுதியைப்பற்றி சிந்திப்போம் என்று தன் மறையுரையைத் துவக்கினார்.
பிலிப்பியருக்கு எழுதியத் திருமுகம் இரண்டாம் பிரிவில் காணப்படும் இப்பகுதி 'கிறிஸ்து இயல் பாடல்' (“Christological hymn”) என்று பாரம்பரியமாகச் சொல்லப்படுகிறது. நற்செய்திக்காகச் சிறைவாழ்வை ஏற்ற பவுல் அடிகளார், கிறிஸ்துவைப் போன்ற மனநிலை கொண்டிருந்தால், ஆழ்ந்த மகிழ்வை பெறமுடியும் என்று கூறுகிறார். தந்தையின் திருவுளத்திற்கு கிறிஸ்து தன்னையே முழுமையாக அர்ப்பணித்ததால், ஆதாமினால் விளைந்த பாவங்கள் தீர்க்கப்பட்டு, நாம் மீண்டும் நமது இயல்பான நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளோம். கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். (பிலிப்பியர் 2: 8-9) தன்னையே தாழ்த்தியதால் கிறிஸ்து உயர்த்தப்பட்டதுபோல், நாம் அன்பிலும், தாழ்ச்சியிலும் நம்மையேத் தாழ்த்தும்போது கடவுளிடம் நாம் உயர்த்தப்படுகிறோம். எனவே, நமது செபங்களில் கிறிஸ்துவின் முன் மண்டியிடுவோம். படைப்பு அனைத்திற்கும் ஆண்டவரான கிறிஸ்துவின் இறைமையை உணர்ந்து அவர் முன் பணிவோம். நமது சொல்லாலும், செயலாலும் கிறிஸ்துவின் மாட்சியை வெளிப்படுத்தும் சாட்சிகளாக நாம் மாற நமது செபங்களை எழுப்புவோம்.
இவ்வாறு தன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை, கொரியாவில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவ ஒன்றிணைப்பு அமைப்பின் பிரதிநிதிகளைச் சிறப்பாக வரவேற்றார். நைஜீரியா, தென்ஆப்ரிக்கா, சுவாசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளையும் வாழ்த்தினார். அதேபோல், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, பகாமாத்தீவுகள், அமெரிக்க ஐக்கிய நாடு என பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த ஆங்கில மொழி பேசும் திருப்பயணிகளை ஆங்கிலத்தில் வாழ்த்தினார். பின்னர் கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.