2012-06-27 17:03:39

உடல்நலத்திற்கு ஆப்பிளை விட வாழைப்பழம் சிறந்தது


ஜூன்,27,2012. எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்துத் தரப்பினரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் வாழைப்பழத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.
ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் உள்ளது.
பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.
பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் செறிவாக உள்ளது. ஒரு சராசரி வாழைப்பழத்தில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 2.6 கிராம் நார்சத்து ஒரு கிராம் கொழுப்பு மற்றும் 9 மில்லி கராம் வைட்டமின் சி உள்ளது. அதாவது, உடலுக்கு ஊட்டமளிக்கும் 90 கலோரிகள் இதில் உள்ளன.
இத்துடன் எளிதில் ஜீரணத்தன்மை ஏற்படுத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உள்ளது. உலகின் தலைசிறந்த தடகள வீரர்கள் வாழைப்பழம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பயிற்சியின் போது தங்களுக்கு ஏற்படும் சோர்வை வாழைப்பழம் நீக்கும் தன்மை கொண்டது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி நிரம்ப உள்ளது, இது நரம்பு மண்டலத்திற்கு வலு சேர்க்கிறது.
இதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் வாழைப்பழம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாது.
புகைபிடிக்கும் பழக்கம் உடைய சிலர் அப்பழக்கத்தை திடீர் என விட்டு விடும்போது, அவர்கள் உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் நிக்கோடின் என்ற நச்சுபொருளை வாழைப்பழத்தில் உள்ள பி6, பி12 வைட்டமின், பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துப்பொருட்கள் சிறிது, சிறிதாக உடலில் இருந்து அகற்றி விடும்.








All the contents on this site are copyrighted ©.