2012-06-26 16:39:27

விவிலியத் தேடல் திருப்பாடல் 129


RealAudioMP3 நமது பயணங்களின்போது நேரத்தைக் கடத்த நாம் பலவகை முயற்சிகள் எடுப்போம். தனியாகப் பயணம் செய்பவர்கள் புத்தகம் படிப்பார்கள், மடிக்கணணி அல்லது செல்லிடப் பேசியில் ஆழ்ந்து விடுவார்கள். குழுவாகச் செல்பவர்கள் குழு விளையாட்டுக்களில் அல்லது பாடல்கள் பாடுவதில் நேரத்தைக் கழிப்பர். பயணத்தின் பாரத்தைக் குறைக்கும் வழிகள் இவை. நாம் செல்வது திருத்தலம் நோக்கியப் பயணமாக இருந்தால், பக்திப் பாடல்கள் பாடுவோம். செபிப்போம். அல்லது நாம் செல்லும் புனிதத்தலத்தைப் பற்றி நாம் கேட்டவற்றை அல்லது நம் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வோம். அதுவும், நம் மத்தியில் அனுபவம் மிகுந்த ஒருவர் இருந்தால், இந்தப் பகிர்வு ஒரு வரலாறாகவே நம்முன் நீளும். ஒரு சில வேளைகளில் இந்த அனுபவ பகிர்வு நம் வாழ்வைத் திருப்பிப் பார்க்கும் ஒரு வாய்ப்பாகவும் அமையும். இந்த ஒரு பின்னணியுடன் இன்றையத் திருப்பாடலை நாம் அணுகுவோம்.

கடந்த சில வாரங்களாக சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்களை நாம் சிந்தித்து வருகிறோம். இந்த வரிசையில் இன்று நாம் சிந்திக்கவிருக்கும் பாடல், திருப்பாடல் 129. இந்தப் பாடலை வயதில் முதிர்ந்த ஒருவர் பாடியிருக்க வேண்டும், அல்லது எழுதியிருக்க வேண்டும் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. எருசலேம் கோவிலை நோக்கி திருப்பயணம் மேற்கொண்டுள்ள அந்த முதியவர் தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை மட்டுமல்ல, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் நிகழ்ந்தவற்றை அசைபோடுகிறார்.
-------------------------------
குழந்தைப் பருவத்திலும், இளமையிலும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான ஒரு முதியவர், "சின்ன வயசிலருந்தே என்னை எல்லாரும் கொடுமைப் படுத்தினாங்க" என்று தன் கதையை ஆரம்பிப்பதைப் போல், இத்திருப்பாடலும் ஆரம்பமாகிறது.
"என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்" - இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!
இப்படி ஆரம்பமாகும் ஒரு பாடல் துயரத்தில் தொய்த்தெடுக்கப்பட்ட வார்த்தைகளாகத் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அடுத்த வரியில் மீண்டும் அந்த முதல் வரியைத் திருப்பிச் சொல்லும் ஆசிரியர், சட்டென்று ஓர் உண்மையையும் வெளிப்படுத்துகிறார்:
என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்; எனினும், அவர்கள் என்மீது வெற்றி பெறவில்லை.

எட்டு இறைவார்த்தைகளைக் கொண்ட இத்திருப்பாடலில் இரு பிரிவுகளைக் காணலாம். முதல் பிரிவு இஸ்ரயேல் மக்கள் அடைந்த கொடுமைகளைக் கூறுகின்றது. இந்தக் கொடுமைகளைச் செய்தவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்கு என்ன நிகழும் என்பதை இரண்டாம் பிரிவில் நாம் காணலாம். இவ்விரு பிரிவுகளிலும் கவிதை நயமிக்க இரு உருவகங்களை ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இந்த உருவகங்களைச் சிந்திப்பது நமக்குப் பயனளிக்கும். இஸ்ரயேல் மக்களுக்குச் செய்யப்பட்டக் கொடுமைகளை 3 வது சொற்றொடரில் நாம் இவ்வாறு கேட்கிறோம்:
உழவர் என் முதுகின்மீது உழுது நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்.
இஸ்ரயேல் மக்கள், அடிமைகளாக அந்நிய நாடுகளில் கடின உழைப்புக்கு கட்டாயப்படுத்தப்பட்டபோது, அவர்கள் மீது விழுந்த சாட்டையடிகள் எண்ணிலடங்காதவை. அந்தச் சாட்டையடிகளை அதிகம் தாங்கியது அவர்கள் முதுகுப் பகுதி. சாட்டையடிகளின் ஆழமான தழும்புகள் அவர்கள் முதுகில் பதிந்துள்ளதை, பாடல் ஆசிரியர் உழுத நிலத்திற்கு ஒப்பிடுவது அழகான, ஆழமான எண்ணம்.

கலப்பையைக் கொண்டு நிலத்தை உழும்போது, அது மண்ணைக் கீறி, நீண்ட படைச்சால்களை உருவாக்கும். மண்ணை நாம் நிலமகளாய் ஒப்பிட்டுப் பேசும்போது, அவள்மீது கலப்பை ஆழமான கீறல்களை உருவாக்குகின்றது என்று எண்ணும்போது, வேதனைப் படுகிறோம். ஆனால், மண்ணை அப்படிக் கீறினால்தான் விதைக்க முடியும், பயிர் வளர முடியும். பாவம் நிலமகள்... அவளைக் கீறக்கூடாது என்று நிலத்தை உழாமல் விட்டுவிட்டால், வேளாண்மை நடக்காது. கலப்பையால் கீறப்படாத நிலம் நாளடைவில் பயனற்றுப் போகும். கீறல்களைப் பெறும் நிலமகள்தான் பயன்தர முடியும்.
இஸ்ரயேல் மக்களின் முதுகு நிலத்தைப் போல் கீறப்பட்டுள்ளது என்று ஆசிரியர் சொல்லும்போது, அந்தக் கீறல்கள் பயனுள்ள விளைச்சலைத் தருவதற்கே அவ்வாறு கீறப்பட்டன என்று ஆசிரியர் சொல்லாமல் சொல்கிறார். தங்கள் இனத்தவர் வேற்று நாட்டவரால் சாட்டையடிகள் பெற்றாலும், அத்துன்பங்கள் எல்லாம் ஆக்கப் பூர்வமான விளைவுகளை அவர்களிடம் உருவாக்கின என்பதை மறைமுகமாகச் சொல்லும் வரிகள் இவை. மனித வரலாற்றில் யூதர்கள் என்ற இனம் அடைந்த துன்பங்களை நாம் அறிவோம். அத்துன்பங்களையெல்லாம் தாண்டி, அவர்கள் மனித சமுதாயத்திற்கு செய்துள்ள ஆக்கப்பூர்வமானப் பணிகளை நாம் எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுமைகள் செய்தவர்களை இப்பாடலின் 5,6,7 ஆகிய சொற்றொடர்களில் 'கூரைமேல் முளைக்கும் புல்' என்ற ஓர் அழகிய உருவகத்தின் வழியாக ஆசிரியர் விவரிக்கிறார். இதோ அந்தக் கவிதை வரிகள்:
சீயோனைப் பகைக்கும் அனைவரும் அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக! கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; வளருமுன் அது உலர்ந்துபோகும். அதை அறுப்போரின் கைக்கு, ஒரு பிடிகூடக் கிடைக்காது; அரிகளைச் சேர்த்தால் ஒரு சுமைகூடத் தேறாது.
ஆழமான வேர் இல்லாமல், கூரைமேல் முளைக்கும் புல், விரைவில் வளரும், வளர்ந்த வேகத்தில் உலர்ந்தும் போகும். இந்தப் புல்லால் யாருக்கும், எவ்வகையிலும் பயனில்லை. அதேபோல், இஸ்ரயேல் மக்களைத் துன்புறுத்தியவர்களும் சிறிது காலம் வெற்றி பெற்றதைப் போல் உணர்ந்தாலும், அவர்கள் எவ்வித பயனுமின்றி அழிந்துவிடுவர் என்பதை ஆசிரியர் இவ்வரிகளில் உணர்த்துகிறார்.

திருப்பாடல் ஆசிரியர் இவ்வுருவகத்தில் கூறுவது... மண்ணில், நிலத்தில் வளரும் புல் அல்ல... மாறாக, 'கூரைமேல் முளைக்கும் புல்'. இந்த உருவகத்தில் மற்றொரு ஆழம் இருப்பதை நாம் உணரலாம். அதாவது, நிலத்தில் முளைக்கும் புல்லைவிட, கூரைமேல் முளைக்கும் புல், ஏதோ உயர்வான இடத்தில் தான் இருப்பதாக நினைத்துக் கொள்ளும். அதேபோல், நலிந்தோரை வதைப்பதால் தாங்கள் வலியோர் என்று இறுமாப்பு கொள்ளும் மனிதர்கள், ஏதோ பெரியதொரு சாதனையைச் செய்துவிட்டதைப்போல் ஒரு சில மணித்துளிகள் உணரலாம். கூரைமீது நிற்பது போல் பெருமைப் படலாம். ஆனால், அந்த உயர்வு நிரந்தரம் அல்ல, அவர்கள் வேரின்றி, நீரின்றி விரைவில் உலர்ந்து போவார்கள் என்பதை ஆசிரியர் இந்த உருவகத்தின் வழியாகத் தெளிவாக்குகிறார். “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள்” என்று நாம் தமிழில் சொல்லும் பழமொழியும், தன்னிலை மறந்து மமதையில் திரியும் மக்களைக் குறிக்கும் என்பதை நாம் அறிவோம்.

இத்திருப்பாடலின் இறுதிச் சொற்றொடர் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இருந்த ஒரு பழக்கத்தை எடுத்துரைக்கிறது. வயல்வெளிகளில் இஸ்ரயேல் மக்கள் பயிர்களை அறுவடை செய்யும் வேளையில், வழிப்போக்கராய் அவ்வழியே செல்லும் மற்ற இஸ்ரயேல் மக்கள், "ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!' என்றோ 'ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்குகிறோம்" என்றோ சொல்வார்கள். நல்ல அறுவடையைத் தந்த இறைவனை வாழ்த்திச் சொல்லும் வார்த்தைகள் இவை. ஆனால், கூரைமேல் முளைத்த புல்லை அறுத்துக் கொட்டும்போது, இதுபோன்ற ஆசீர் நிறைந்த சொற்கள் அங்கு சொல்லப்படுவதில்லை. அதேபோல், இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுமைகள் விளைத்தவர்களும் யாராலும் ஆசீர் பெறாமல், அழிந்து போவார்கள் என்ற எண்ணத்துடன் இப்பாடல் நிறைவடைகிறது.

உழுத நிலம் போன்ற முதுகு, கூரைமேல் முளைத்த புல் என்ற இரு உருவகங்கள் வழியே நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் உள்ளன. நொடிப்பொழுது புகழுக்காக அநீதிகளைச் செய்யத் துணியும் மனங்கள் கூரைமேல் முளைக்கும் புல்லைப்போல உயரத்தில் பறப்பதில் பயனில்லை என்பதையும், துன்பங்கள் என்ற கலப்பையால் நம் உடல் உழுத நிலமாய் மாறினாலும், அத்துன்பங்கள் வழியே நல்ல விளைச்சலைத் தரும் நன்னிலமாய் நாம் மாற வேண்டும் என்பதையும் திருப்பாடல் ஆசிரியர் இப்பாடலின் மூலம் நமக்குச் சொல்லித் தருகிறார்.
உழுது விடப்பட்ட ஒரு நிலம் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். ஆனால், காலம் செல்லச் செல்ல அதே நிலத்தில் விதைகள் முளைத்து, பயிர்கள் முதிர்ந்து அசைந்தாடும்போது அந்நிலம் பார்க்க அழகாக இருக்கும். அதேபோல், துன்பங்கள் நம்மை வதைக்கும்போது நம் வாழ்க்கை பார்க்கப் பரிதாபமாய் இருக்கும். பொறுமையுடன் காத்திருந்தால், தகுந்த பலனோடு வாழ்வு அழகாக மாறும். கலப்பையின் கீறல் எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமாய் உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு விளைச்சல் நன்றாக இருக்கும் என்பதுபோல், துன்பங்கள் ஆழமாய் நம்மைக் கீறும்போது நமது பலனும் பல மடங்காகும்.

திருப்பாடல் 129, இளமை முதல் துன்புறுத்தப்பட்ட இஸ்ரயேல் இனத்தவரைப் பற்றிய பாடல் என்றாலும், இதே பாடல் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும் என்று திருப்பாடல் விரிவுரையாளர்கள் சொல்கின்றனர். கிறிஸ்தவத் திருமறை பிறந்தது முதல் பெரிதும் துன்புறுத்தப்பட்ட ஒரு மதம். மிருகங்களைப் பல நாட்கள் பசியோடு வைத்திருந்து, பின்னர் கிறிஸ்தவர்களை அம்மிருகங்கள் கிழித்து உண்பதை ஒரு விளையாட்டாகப் பார்த்து மகிழ்ந்தது உரோமையக் கலாச்சாரம். இன்றும் கிறிஸ்தவர்களை ஆயுதங்களால் வேட்டையாடும் அடிப்படைவாத கும்பல்கள் பல நாடுகளில் உள்ளன. பசி வெறியால் மிருகங்கள் கிறிஸ்தவர்களை வேட்டையாடின என்பதையாவது நாம் இயற்கை என்று விளக்கம் சொல்லலாம். ஆனால், மதவெறியால் கிறிஸ்தவர்களை, வேற்று மதத்தவரை வேட்டையாடும் அடிப்படை வாத கும்பல்களை எவ்விதம் புரிந்து கொள்வது என்று அறியாமல் நாம் திகைக்கிறோம். திருப்பாடல் 129ஐச் சிந்திக்கும் இவ்வேளையில் நைஜீரியா, சிரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் ஒரு சில பகுதிகளிலும் தொடர்ந்து வேட்டையாடப்படும் கிறிஸ்தவர்களை இறைவன் காக்க வேண்டும் என்று மன்றாடுவோம். இத்திருப்பாடலின் 4ம் திருவசனத்தில் சொல்லப்பட்டுள்ள நம்பிக்கை தரும் வார்த்தைகளுடன் நம் விவிலியத் தேடலை நிறைவு செய்வோம்:
ஆண்டவர் நீதியுள்ளவர்; எனவே, பொல்லார் கட்டிய கயிறுகளை அவர் அறுத்தெறிந்தார்.








All the contents on this site are copyrighted ©.