2012-06-26 16:49:24

உலகின் அதிகமான இடங்களில் அப்பாவி மக்கள் ஆயுதத் தாக்குதல்களில் சிக்குண்டு உயிரிழந்து வருகின்றனர் - ஐ.நா. பொதுச்செயலர் கவலை


ஜூன்,26,2012. இன்று உலகின் அதிகமான இடங்களில், ஆயுதத் தாக்குதல்களில் சிக்குண்டு உயிரிழந்து வரும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை கூடிவருகிறது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் தன் கவலையை வெளியிட்டார்.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் உயர்மட்டக் கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய பான் கி மூன், போரிடும் குழுக்களுக்கு இடையே நிகழும் ஆயுதத் தாக்குதல்களில் மக்கள் இறக்க வேண்டியுள்ளது என்றும், பல இடங்களில் பொதுமக்கள் தாக்குதல்களுக்கு இலக்காகவும் மாறி வருகின்றனர் என்றும் பான் கி மூன் சுட்டிக்காட்டினார்.
கொல்லப்படுவது மட்டுமல்லாமல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாதல், எவ்விதத் தடயமும் இன்றி காணாமற் போதல், சித்திரவதைகளுக்கு உள்ளாதல் போன்ற ஏனைய கொடுமைகளுக்கும் அப்பாவி பொதுமக்கள் ஆளாகிறார்கள் என்று பான் கி மூன் எடுத்துரைத்தார்.
மக்களைக் காக்கச் செல்லும் ஐ.நா.பாதுகாப்புப் படைவீரர்களும் அண்மையக் காலங்களில் வன்முறைகளுக்கு உள்ளாகி இறக்கவேண்டியுள்ளது என்ற கவலையையும் வெளியிட்டார் ஐ.நா.பொதுச் செயலர்.
உலகில் பாதுகாப்பானச் சூழலை உருவாக்க விழையும் ஐ.நா.வின் முயற்சிகளுக்கு பன்னாட்டு அரசுகளும் முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்று பான் கி மூன் அழைப்பு விடுத்தார்.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் உயர் மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய உயர் அதிகாரிகளும், ஐ.நா. பொதுச் செயலரின் எண்ணங்களை ஆமோதித்து பேசினர்.








All the contents on this site are copyrighted ©.