2012-06-25 14:36:52

கிராமப்புற வாழ்வை மையப்படுத்திய நான்காம் அனைத்துலக மாநாட்டில் கர்தினால் பீட்டர் டர்க்சன் வழங்கிய உரை


ஜூன்,25,2012. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், வேளாண்மையைப் பற்றியும், நிலஉடமைப் பற்றியும் திருஅவை சிந்தித்துள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கிராமப்புற வாழ்வை மையப்படுத்திய நான்காம் அனைத்துலக மாநாடு உரோம் நகரில் இஞ்ஞாயிறன்று ஆரம்பமானது. இந்த மாநாட்டில் இத்திங்களன்று உரையாற்றிய திருப்பீட நீதி, அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான் எழுதிய Mater et Magistra சுற்றுமடலில் காணப்படும் கருத்துக்களை எடுத்துக் கூறினார்.
இரண்டாம் உலகப் போரிலிருந்து நாடுகள் மீண்டதையும், காலனிய ஆதிக்கத்திலிருந்து பல நாடுகள் விடுதலைப் பெற்றதையும் 1960களில் நாம் கண்டோம் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன், அக்காலக்கட்டத்தில் திருத்தந்தையாக இருந்த 23ம் ஜான் வெளியிட்ட Mater et Magistra சுற்றுமடல் வேளாண்மையைக் குறித்தும், நில உடமையைக் குறித்தும் பேசியது காலத்திற்கு ஏற்றதாக அமைந்தது என்றும் எடுத்துரைத்தார்.
"மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்" என்ற திருப்பாடல் 24ன் ஆரம்ப வார்த்தைகளை மேற்கோளாகக் கூறிய கர்தினால் டர்க்சன், இன்றைய உலகில் இந்த வார்த்தைகளுக்கு எதிரானச் சூழல் உருவாகியுள்ளது என்பதைக் கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உட்பட அண்மையத் திருத்தந்தையர்கள் அனைவரும், தற்போது உலகில் நிலவிவரும் ஏழ்மையும், பட்டினியும் ஏற்றுக் கொள்ள முடியாத அவலநிலை என்று கூறி வந்துள்ளனர் என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டிய திருப்பீட நீதி அமைதி அவையின் தலைவர், அடிப்படைத் தேவைகள் இன்றி தவிக்கும் 200 கோடி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க உலக அரசுகள் நிரந்தர முடிவுகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திருப்பீட நீதி, அமைதி அவையும், ICRA எனப்படும் அனைத்துலகக் கத்தோலிக்கக் கிராமிய அமைப்பும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு ஜூன் 27, வருகிற புதனன்று நிறைவடையும்.








All the contents on this site are copyrighted ©.