2012-06-23 15:41:47

புலம்பெயரும் மக்களுக்குத் தேவை நம்பிக்கை : அருள்தந்தை லொம்பார்தி


ஜூன்23,2012. புலம்பெயரும் மக்களுக்கு உறைவிடமும் உணவும் வழங்குவதோடு, அவர்களுக்குப் பிறர்மீதும் வாழ்க்கை மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டுமென்று இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி கேட்டுக் கொண்டார்.
வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அவர், அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், பசி எனப் பல காரணங்களால் தங்கள் நாடுகளைவிட்டுப் புலம் பெயரும் மக்கள் சொல்வதைக் கேட்டு அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு மனித மற்றும் ஆன்மீக ஆதரவை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தின்மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட முடியும் என்று கூறினார்.
நல்லதோர் எதிர்காலத்தை உண்மையிலேயே அமைக்க விரும்பும் விசுவாசிகளுக்கும் நன்மனம் கொண்ட மக்களுக்கும் இது ஒரு பெரிய சவாலாக இருக்கின்றது என்றும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.
இந்த மக்கள் புலம்பெயரும் போது பசி, தாகம், திருடர்களின் தாக்குதல், படகு கவிழ்தல் போன்ற பல இடர்களால் இறக்கின்றனர் எனவும், அண்மை ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வர முயற்சித்தவர்களில் இருபதாயிரம் பேர் பயணங்களின்போது இறந்தனர் எனவும், கடந்த ஆண்டில் மத்தியதரைக்கடல் வழியாக இத்தாலிக்கு வந்தவர்களில் சுமார் 3,000 பேர் இறந்தனர் எனவும் அவர் கூறினார்.
மக்கள் பணக்கார நாடுகளுக்கு மட்டும் வருவதற்கு முயற்சிக்கவில்லை என்றும் உரைத்த அவர், மாலி நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டையால் Mauritania வின் Mberra முகாமில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அடைக்கலம் தேடினர் என்று தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.