2012-06-23 15:41:25

திருப்பீடப் பல்வேறு பேராயங்களின் தலைவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு


ஜூன்23,2012. திருப்பீடத் தலைமையகத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்களுடன் இச்சனிக்கிழமை கூட்டம் ஒன்றை நடத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இக்கூட்டம் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, திருப்பீடத் தலைமையகத்தின் பணியில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் விவகாரங்கள் தொடர்பாக இக்கூட்டம் நடைபெற்றது என்று கூறினார்.
திருப்பீடத்தின் பணிக்கு இந்த ஒத்துழைப்பு இக்காலத்துக்கு மிக முக்கியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
உரோமன் தலைமையகத்தின் பணியில் நல்ல அமைதியும் நம்பிக்கையும் நிறைந்த சூழலை நிலைநாட்டுவதற்கு உதவுகின்ற பரிந்துரைகளையும் கருத்துக்களையும் பெறும் நோக்கத்தில் திருஅவைப் பணியில் பல்வேறு துறைகளில் நீண்டகால அனுபவங்களைக் கொண்டுள்ள கர்தினால்களையும் இச்சனிக்கிழமை மாலையில் திருத்தந்தை சந்திக்கிறார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
இந்தச் சிந்தனைகளையும் பகிர்வுகளையும் அடுத்த சில நாள்களுக்குத் திருத்தந்தை தொடர்ந்து நடத்துவார் என்றும், தூயவர்கள் பேதுரு பவுல் பெருவிழாவுக்கென உரோமைக்குப் பல திருஅவைத் தலைவர்கள் வருவது இதற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
தனது அறையிலிருந்து நம்பகத்தன்மை கொண்ட ஆவணங்கள் வெளியேறியது தொடர்பாக, திருஅவை நிர்வாகத்தில் அவரோடு பொறுப்பைப் பகிர்ந்து கொள்பவர்களுடன் உரையாடல் நடத்தித் தனது சிந்தனைகளைத் திருத்தந்தை பகிர்ந்து கொள்கிறார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி அறிவித்தார்.
நம்பகத்தன்மை கொண்ட ஆவணங்கள் வெளியானது குறித்து இடம்பெற்று வரும் விசாரணைகள் பற்றிய விரிவான செய்திகளை அறிய விரும்பி, இந்த விசாரணையை நடத்துவதற்கு அவர் நியமித்துள்ள கர்தினால் Julian Herranz தலைமையிலான கர்தினால்கள் குழுவை கடந்த சனிக்கிழமையன்றும் திருத்தந்தை சந்தித்தார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி நிருபர்களிடம் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி கர்தினால் ஜார்ஜ் பெல், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, உரோம் மறைமாவட்ட முன்னாள் துணைத்தலைவர் கர்தினால் Camillo Ruini, நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் Jozef Tomko ஆகியோரை இச்சனிக்கிழமை மாலை சந்திக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.