2012-06-22 16:42:46

போதைப்பொருள் வியாபாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்மீது மிகுந்த அக்கறை காட்டுமாறு கொலம்பிய ஆயர்களிடம் திருத்தந்தை வலியுறுத்தல்


ஜூன்22,2012. இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள், கடும் ஏழைகள், தங்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட புலம் பெயர்ந்தவர்கள், ஆயுதம் தாங்கியக் குற்றக்கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்மீது மிகுந்த அக்கறை காட்டுமாறு கொலம்பிய ஆயர்களிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினாவையொட்டி கொலம்பிய நாட்டு ஆயர்களில் முதல் குழுவினரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, சமூகத்தில் பலவிதங்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆயர்கள் மிக நெருக்கமாக வாழுமாறு வலியுறுத்தினார்.
கொலம்பியாவில் மட்டுமல்லாமல் இலத்தீன் அமெரிக்காவின் பல பகுதிகளில் Pentecostal மற்றும் Evangelical சபைகள் வளர்ந்து வருவதைப் புறக்கணிக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ முடியாது என்றும் கூறிய திருத்தந்தை, இறைமக்கள் சமுதாயம் தங்களது விசுவாசத்தைத் தூய்மைப்படுத்தி அதனைப் புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையை விட்டு விசுவாசிகள் விலகிச் செல்வதற்கானக் காரணத்தை விளக்கிய திருத்தந்தை, பங்குத்தளங்களிலும் கிறிஸ்தவச் சமூகங்களிலும் நல்ல கிறிஸ்தவர்களை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், தாங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் என்று உணரக்கூடாத வகையில் வசுவாசிகள் பராமரிக்கப்பட வேண்டுமெனவும் பரிந்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.