2012-06-22 16:42:59

திருத்தந்தை: தற்போதைய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள் வேளாண்துறையையும் பாதித்துள்ளது


ஜூன்22,2012. Coldiretti என்ற இத்தாலிய தேசிய வேளாண் கூட்டமைப்பின் நூறு பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தற்போது பல நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள் வேளாண்துறையையும் அதிகமாகப் பாதித்துள்ளது என்று கூறினார்.
வேளாண் உலகத்தில் குடும்பத்தினரின் பங்கு பற்றியும் அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என்பது பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, இந்தக் கூட்டமைப்பை ஆரம்பித்த Paolo Bonomi என்பவரின் இலக்கு தொடர்ந்து வளர்க்கப்படுவதற்கு முயற்சிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பொறுமையுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் எப்போதும் உழைக்கும் மக்களின் நியாயமான உரிமைகள் பாதுகாக்கப்படவும், பகிர்வு, தியாகம், ஒருமைப்பாட்டுணர்வு போன்ற மனிதரின் நல்ல பண்புகள் காக்கப்படவும் தொடர்ந்து உழைக்குமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
மனித மாண்பு மதிக்கப்படல், மனிதரின் உரிமைகள் காக்கப்படல், நிர்வாகப்பணிகளில் நேர்மை, ஒளிவு மறைவின்மை விளங்குதல், உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தோழமையுணர்வை வளர்த்தல் போன்றவை உண்மையான உழைப்பில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார்.
வேளாண்துறையும் விவசாயிகளும் தக்கவிதமாய்ப் பாதுகாக்கப்படுவதற்கு மட்டுமல்லாமல், நல்ல சமூகநலக் கொள்கைகள் உருவாக்கப்படுவதற்கு இந்த Coldiretti கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்து வருவதையும் திருத்தந்தை பாராட்டினார்.
1944ம் ஆண்டு அக்டோபர் 30 தேதி Paolo Bonomi என்பவரால் உருவாக்கப்பட்ட Coldiretti என்ற இத்தாலிய அமைப்பு, 19 மாநில வேளாண் கழகங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். இதில் 16 இலட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இது 850 உழவர் சந்தைகளையும் கொண்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.