ஜூன்,21,2012. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவு, கத்தோலிக்கத்
திருஅவையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டு நிறைவு ஆகிய இவ்விரு நிகழ்வுகளையும்
கொண்டாடும் விதமாக விசுவாச ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார் புதிய நற்செய்தி அறிவிப்பை
ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Rino Fisichella. இவ்வாண்டு அக்டோபர்
11ம் தேதியன்று தொடங்கி 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும் விசுவாச ஆண்டு
குறித்து இவ்வியாழனன்று நிருபர் கூட்டத்தில் விளக்கிய பேராயர் Fisichella தலைமையிலான
குழு, இந்த விசுவாச ஆண்டில் 21 பொது நிகழ்வுகள் நடைபெறும் என அறிவித்தது. வருகிற
அக்டோபர் 11ம் தேதி வியாழனன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை நிகழ்த்தும்,
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு ஆடம்பரத் திருப்பலியோடு இந்த
விசுவாச ஆண்டு தொடங்கும். உலக ஆயர் மாமன்றத் தந்தையர்கள் திருத்தந்தையுடன் சேர்ந்து கூட்டுத்திருப்பலி
நிகழ்த்துவார்கள். பின்னர் அக்டோபர் 21ம் தேதி ஞாயிறன்று திருத்தந்தை புனிதர் பட்டமளிப்புத்
திருப்பலியை நிகழ்த்துவார் என்றும் பேராயர் Fisichella தெரிவித்தார்.