2012-06-21 16:09:53

திருத்தந்தை, மொந்தே நெக்ரோ அரசுத்தலைவர் சந்திப்பு


ஜூன்,21,2012. திருப்பீடத்துக்கும் மொந்தே நெக்ரோ குடியரசுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்த வழிமுறைகள் பரிமாறப்பட்ட நிகழ்வையொட்டி இவ்வியாழனன்று திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசினார் மொந்தே நெக்ரோ அரசுத்தலைவர் Filip Vujanović.
17 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அரசுத்தலைவர் Filip Vujanović.
திருப்பீடத்துக்கும் மொந்தே நெக்ரோ குடியரசுக்கும் இடையே 2011ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி கையெழுத்தான ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்த வழிமுறைகள், வத்திக்கான் அப்போஸ்தலிக்க மாளிகையில் இவ்வியாழனன்று இவ்விரு நாடுகளுக்கிடையே பரிமாறப்பட்டன.
திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே, மொந்தே நெக்ரோ அரசுத்தலைவர் Filip Vujanović ஆகியோருக்கிடையே இப்பரிமாற்றங்கள் இடம் பெற்றன. இந்நிகழ்வில் இவ்விரு நாடுகளின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மொந்தே நெக்ரோ அரசுத்தலைவர் Filip Vujanović, இந்த ஒப்பந்தம் ஓராண்டுக்கு முன்னரே கையெழுத்தாகியிருந்தாலும், இவ்வாண்டு மே 29ம் தேதிதான் மொந்தே நெக்ரோ நாடாளுமன்றத்தில் இதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டதாகவும், திருப்பீடத்துக்கும் மொந்தே நெக்ரோ குடியரசுக்கும் இடையேயான உறவில் வரலாற்று ஏட்டில் இது ஒரு முக்கிய மற்றும் வளமையான பக்கமாக இருப்பதாகவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.