2012-06-19 16:43:19

நல்மனம் உள்ளோர் அனைவரும் இணைந்து நீதி நிறைந்த உலகை உருவாக்க வேண்டும் - ரியோ டி ஜெனீரோ நகரில் திருஅவைத் தலைவர்களின் அறிக்கை


ஜூன்,19,2012. நாம் வாழும் உலகில் இன்னும் பல கோடி மக்கள் உணவும், ஏனையத் தேவைகளும் இல்லாமல் வாழும் வகையில் நாம் இவ்வுலகை மாற்றியுள்ளது மிகவும் வருந்துதற்குரியது என்று திருஅவைத் தலைவர்கள் கூறினர்.
ஜூன் 20 இப்புதனன்று ரியோ டி ஜெனீரோ நகரில் ஆரம்பமாகும் Rio+20 என்ற பூமிக்கோள உச்சி மாநாட்டிற்கு ஒரு முன்னோடியாக, அந்நகரின் பேராலயத்தில் திருஅவைத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
தனி மனித சுயநலன்களை அளவுக்கு அதிகமாக நாம் வளர அனுமதித்துவிட்டதால், பல கோடி மக்கள் அடிப்படைத் தேவைகளும் இல்லாமல் துன்புறும் சூழலை நாம் உருவாக்கியுள்ளோம் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகத்தலைவர்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு தனி மனிதரும் அடிப்படை மனமாற்றத்தையும், வேறுபட்ட ஒரு வாழ்க்கை முறையையும் பின்பற்றினால் மட்டுமே மனித சமுதாயத்தையும், சுற்றுச்சூழலையும் நாம் பாதுகாக்கமுடியும் என்று திருஅவைத் தலைவர்களின் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
150 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த உச்சி மாநாடு வெற்றி பெறவேண்டுமெனில், நல்மனம் உள்ளோர் அனைவரும் இணைந்து நீதி நிறைந்த உலகை உருவாக்க வேண்டும் என்று இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.








All the contents on this site are copyrighted ©.