2012-06-19 16:43:46

கடந்த பத்து ஆண்டுகளில் காணாத அளவு 2011ம் ஆண்டு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது


ஜூன்,19,2012. கடந்த பத்து ஆண்டுகளில் காணாத அளவு 2011ம் ஆண்டு 8 இலட்சம் மக்கள் தங்கள் சொந்த நாடுகளைவிட்டு அண்மைய நாடுகளுக்குப் புலம்பெயரவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஜூன் 20 இப்புதனன்று கடைபிடிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் உலக நாளையொட்டி அறிக்கை வெளியிட்ட ஐ.நா.வின் புலம் பெயர்ந்தோர் அமைப்பு, கடந்த ஈராண்டுகளில் லிபியா, சொமாலியா, சூடான் ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்து மற்ற நாடுகளுக்குப் புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை கூடிவந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
அரசியல், மதம், இனம் ஆகிய பிரச்சனைகளின் அடிப்படையில் நாடு விட்டு நாடு துரத்தப்படும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமாகி வருகிறது என்பதை இவ்வறிக்கை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.
உலகில் மிக அதிக அளவில் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை உருவாக்கியுள்ளது ஆப்கானிஸ்தான் என்று சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, அதற்கு அடுத்தப்படியாக ஈராக், சொமாலியா, சூடான் ஆகிய நாடுகளைக் குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோருக்குப் புகலிடம் தருவதில் ஜெர்மனி முதல் இடத்திலும் தென் ஆப்ரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளதாக இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
"புலம்பெயர்ந்தோருக்கு விருப்பத் தேர்வுகள் கிடையாது, உங்களுக்கு உண்டு" (“Refugees have no choice. You do.”) என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டு புலம்பெயர்ந்தோரின் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.