2012-06-19 16:42:54

அநீதச் சூழல்கள் மலிந்து வரும் வேளைகளில் நிதி உதவி அமைப்புக்கள் நம்பிக்கை இழக்காமல், இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் - திருப்பீட உயர் அதிகாரி


ஜூன்,19,2012. உலகில் நிலவும் துன்பங்களை அக்கறையுடன் அறிந்துகொள்ளும் அறிவையும், அத்துன்பன்களைக் களைவதற்குத் தேவையான மனப்பாங்கையும் திருநற்கருணையில் இருக்கும் இறைவன் நமக்குத் தருகிறார் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் உரோம் நகரில் கீழை ரீதி திருஅவைகளின் நிதி உதவி அமைப்புக்களின் கூட்டமைப்பான ROACO என்ற இயக்கத்தின் 85வது கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் நிறைவுத் திருப்பலியில் மறையுரை ஆற்றிய கீழைரீதி பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri, அரசர்கள் முதல் நூலில் கூறப்பட்டுள்ள ஆகாபு, நாபோத் ஆகியோரின் சம்பவத்தைக் குறித்து, தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
ஆகாபு செல்வந்தனாய் இருந்தபோதும், நாபோத்தின் நிலத்தையும் பறிப்பதற்காக அவரைக் கொன்றதுபோல், இன்றும் செல்வந்தர்கள் தங்களுக்கு உள்ளதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருப்பதைக் காணமுடிகிறது என்று கர்தினால் சுட்டிக்காட்டினார்.
இவ்வகை அநீதச் சூழல்கள் மலிந்து வரும் வேளைகளில் நிதி உதவி அமைப்புக்கள் நம்பிக்கை இழக்காமல், இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டுமென்று கர்தினால் Sandri கேட்டுக் கொண்டார்.
சிரியாவில் நடைபெறும் வன்முறைகளைக் குறித்து தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டுப் பேசிய கீழைரீதி பேராயத்தின் தலைவர் கர்தினால் Sandri, அங்குள்ள அப்பாவி மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் முயற்சிகளில் திருஅவை தொடர்ந்து ஈடுபடும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.