2012-06-18 15:17:12

கர்தினால் Marc Ouellet: திருநற்கருணை மாநாட்டின் வழியே நமது உள்ளொளியைப் பெருக்கியுள்ள இறைவனுக்கு நன்றி கூறுவோம்


ஜூன்,18,2012. திரு அவையின் உறுப்பினர்களிடையே குறைபாடுகளும், தவறுகளும் நிகழ்ந்தாலும், உயிர்த்த இயேசுவே நமது பாதுகாப்பாக இருந்து, நமது காயங்களையும், குறைகளையும் குணப்படுத்துகிறார் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
டப்ளின் நகரில் இஞ்ஞாயிறன்று நிறைவுக்கு வந்த அனைத்துலகத் திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியின்போது மறையுரையாற்றிய ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet, திருநற்கருணை மாநாட்டின் வழியே நமது உள்ளொளியைப் பெருக்கியுள்ள இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்று கூறினார்.
திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுள்ள விசுவாசம் என்ற கொடை மிகவும் மதிப்பிற்குரியது என்று கூறிய கர்தினால் Ouellet, இக்கொடையை நமது தனிப்பட்ட உடைமையாகக் காப்பாற்றுவதைவிட, இக்கொடையைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைக்கப்பட்டுள்ளார் என்று எடுத்துரைத்தார்.
இத்திருப்பலியின் இறுதியில் பேசிய டப்ளின் பேராயர் Diarmuid Martin, அனைத்துலக திருநற்கருணை மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றதற்காக அயர்லாந்து அரசுத் தலைவர், பிரதமர் உட்பட, அரசு அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
உலகின் 120க்கும் மேலான நாடுகளிலிருந்து 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் தன் நன்றியைக் கூறிய பேராயர் மார்ட்டின், 2016 ஆண்டு நடைபெறவிருக்கும் 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டை நடத்தவிருக்கும் பிலிப்பின்ஸ் நாட்டு Cebu பேராயர் Jose Palma அவர்களையும், அந்நகரின் மக்களையும் வாழ்த்தினார்.







All the contents on this site are copyrighted ©.