2012-06-18 15:17:24

2016ம் ஆண்டு, 51வது அனைத்துலகத் திருநற்கருணை மாநாடு பிலிப்பின்ஸ் நாட்டின் Cebu நகரில் நடைபெறும் - திருத்தந்தை


ஜூன்,18,2012. திருஅவையின் உயிர் நாடியாக விளங்கும் Koinonia என்று அழைக்கப்படும் ஒன்றிப்பு, கிறிஸ்துவுடனும் மற்ற மக்களுடனும் கொண்டிருக்கும் உறவை ஒவ்வோர் அருள்சாதனத்தின் வழியாகவும், முக்கியமாக, திருநற்கருணை வழியாகவும் நமக்குப் புரிய வைக்கிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
அயர்லாந்தின் டப்ளின் நகரில் இஞ்ஞாயிறன்று நிறைவுக்கு வந்த அனைத்துலகத் திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியின்போது திருத்தந்தை அனுப்பியிருந்த ஒளிச் செய்தி மாநாட்டுத் திடலில் ஒளிபரப்பப்பட்டது.
கூடியிருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற அந்த ஒளிச் செய்தியில், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவும், 50ம் அனைத்துலகத் திருநற்கருணை மாநாடும் இணைந்து வந்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அயர்லாந்து கத்தோலிக்கத் திருஅவையின் வரலாற்றை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, திருநற்கருணை பக்தியை உலகெங்கும் பறைசாற்ற அயர்லாந்திலிருந்து பிற நாடுகளுக்கு மறை பணியாளர்களாய்ச் சென்ற பலரை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் 51வது அனைத்துலகத் திருநற்கருணை மாநாடு பிலிப்பின்ஸ் நாட்டின் Cebu நகரில் நடைபெறும் என்று தனது ஒளிச் செய்தியின் இறுதியில் திருத்தந்தை அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.