2012-06-16 16:14:49

ஆயுத வியாபாரத்தை நிறுத்துமாறு ஆசிய ஆயர்கள் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு


ஜூன்16,2012. உலகில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு முக்கிய காரணமாக ஆயுத வியாபாரம் இருக்கின்றது என்று சொல்லி, ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் ஆசிய ஆயர்கள்.
ஐ.நா.வால் கொண்டுவரப்பட்ட ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகிற ஜூலை 2ம் தேதிக்கும் 27ம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் நியுயார்க்கில் உலக வல்லரசுகள் கூட்டம் நடத்தவிருப்பதையொட்டி ஆசிய ஆயர்கள் இவ்வழைப்பை முன்வைத்துள்ளனர்.
FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் மனிதவள மேம்பாட்டு ஆணையத் தலைவர் பேராயர் Charles Bo வெளியிட்டுள்ள விண்ணப்ப அறிக்கையில், ஆயுத வியாபாரத்தை நிறுத்துவதற்கு ஆசிய ஆயர்கள் முன்வைத்துள்ள குறிப்புக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலக அளவில் இராணுவச் செலவுகளுக்கும் ஆயுத வியாபாரத்துக்கும் ஆண்டுக்கு, ஆயிரம் பில்லியன் டாலர் செலவாகிறது என்று குறிப்பிட்டுள்ள யாங்கூன் பேராயர் போ, நாடுகளின் உள்கட்டமைப்பு, சமூக முன்னேற்றம், நலவாழ்வு, சமூகத்தொடர்புகள் ஆகியவற்றுக்குச் செலவழிக்கப்படும் நிதியைவிட இராணுவத்துக்கென அதிகம் செலவழிக்கப்படுகின்றன என்று குறை கூறினார்.







All the contents on this site are copyrighted ©.