2012-06-15 16:03:40

விளையாட்டு விழுமியங்கள் குறித்த வத்திக்கானின் புதிய திட்டங்கள்


ஜூன்15,2012. சந்தைப் பொருளாதாரத்தால் வரையறைக்கப்பட்டுள்ள இன்றைய உலகம், விளையாட்டுக்கள் வழியாக ஊக்குவிக்கப்படும் விழுமியங்களை மழுங்கடிக்கின்றது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் குறை கூறினார்.
திருப்பீடக் கலாச்சார அவையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கலாச்சார மற்றும் விளையாட்டுத் துறையும், திருப்பீடப் பொதுநிலையினர் அவையின் விளையாட்டுத் துறையும் இணைந்து எடுத்துள்ள புதிய முயற்சி பற்றிப் பேட்டியளித்த திருப்பீடக் கலாச்சார அவையின் நேரடிச் செயலர் பேரருட்திரு Melchor Sanchez de Toca y Alameda இவ்வாறு கூறினார்.
விளையாட்டு உலகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது?, கால்பந்து விளையாட்டு இரசிகர்களுக்கு இடையே இடம்பெறும் வன்முறைக்குக் காரணம் என்ன?, விளையாட்டு வீரர்கள் உண்ணும் ஊக்கமருந்து எப்படி? போன்ற கேள்விகளை எழுப்பிய பேரருட்திரு Sanchez de Toca y Alameda, விளையாட்டு விழுமியங்கள் குறித்து அனைவரும் ஆர்வமாக இருப்பதால் இது குறித்த விவாதங்களை நடத்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
போலந்திலும் உக்ரேய்னிலும் ஐரோப்பிய கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரசிகர்களுக்கு இடையே வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இலண்டனில் வருகிற ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை கோடைகால ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன.
இந்த விளையாட்டுக்களையொட்டி திருப்பீட அவைகள் புதிய முயற்சிகளை எடுத்துள்ளன







All the contents on this site are copyrighted ©.