2012-06-14 16:57:18

ஐரோப்பிய நிதி நெருக்கடி எதிரொலி: நொபெல் பரிசுத்தொகையும் குறைப்பு


ஜூன்,14,2012. ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் நிதி நெருக்கடி காரணமாக, நொபெல் பரிசுத்தொகை, 20 விழுக்காடு வரை குறைக்கப்பட உள்ளது.
"டைனமைட்' என்ற வெடிமருந்தைக் கண்டுபிடித்த ஆல்பிரெட் நொபெல் என்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர், தன்னுடைய கண்டுபிடிப்பு அழிவு வேலைக்கு பயன்படுவதைக் கண்டு மனம் வருந்தினார். இதையடுத்து தனது 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, ஆக்கப்பூர்வமானப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விருதாக அளிக்கும்படி கூறி, உயில் எழுதி வைத்தார்.
1901ம் ஆண்டு முதல் நொபெல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கும், அமைதிப் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் நொபெல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறைக்கும், 6.4 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
தற்போது ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஆட்குறைப்பு, ஊதியம் மற்றும் ஓய்வூதிய குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள சூழலில் நொபெல் பரிசுக்கான, 6.4 கோடி ரூபாய் தொகை அளிக்க வேண்டுமா என்பது குறித்து, நொபெல் பரிசுக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. எனவே, தற்போதைய பரிசு தொகையில், 20 விழுக்காடு குறைக்க இந்தக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.








All the contents on this site are copyrighted ©.