2012-06-14 16:57:04

அமெரிக்கத் திருஅவை எடுத்துக் கொண்ட தீவிர முயற்சிகளின் விளைவாக, குழந்தைகள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாகியுள்ளது


ஜூன்,14,2012. கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கத் தலத் திருஅவை எடுத்துக் கொண்ட பல தீவிர முயற்சிகளின் விளைவாக, தற்போது அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாகியுள்ளது என்று ஓர் அறிக்கை கூறுகிறது.
குருக்கள் சிலரால் குழந்தைகள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, இக்கொடுஞ்செயலைக் களைய அமெரிக்கத் திருஅவை 2002ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை மேற்கொண்ட முயற்சிகளைப் பொது நிலையினர் அடங்கிய குழு ஒன்று ஆய்வு செய்துவந்தது.
இந்த ஆய்வறிக்கை இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், குற்றம் செய்தோருக்குத் தகுந்த தண்டனைகள் வழங்கவும் 2002ம் ஆண்டு 77 மறைமாவட்டங்களில் சட்டங்கள் இருந்தன என்று கூறும் இவ்வறிக்கை, தற்போது, இந்த விதிமுறைகள் அமெரிக்காவின் 195 மறைமாவட்டங்களில் நடைமுறையில் உள்ளன என்று கூறுகிறது.
குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாகியிருந்தாலும், குருக்கள்மீது பொது நிலையினரின் நம்பிக்கையை வளர்ப்பதில் அமெரிக்க ஆயர்கள் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.








All the contents on this site are copyrighted ©.