2012-06-13 16:37:54

டீசல் புகையைச் சுவாசிப்பதால், நுரையீரல் புற்றுநோய் உண்டாகும் - WHO


ஜூன்,13,2012. டீசல் இயந்திரங்களும் வாகனங்களும் வெளிவிடும் புகையைச் சுவாசிப்பதால், நுரையீரல் புற்றுநோய் உண்டாகும் என்று WHO உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
சுரங்கத் தொழிலாளிகள், இரயில் துறைப் பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மத்தியில் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவில் WHO இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டீசல் புகையில் உள்ள carcinogens என்ற வேதிப்பொருள் புற்று நோயை உண்டாக்கும் சக்திபெற்றது என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
உலகெங்கும் டீசல் புகைக்கு, மக்கள் பெரும்பாலான நேரங்கள் உள்ளாக்கப்படுவதால், இந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த ஆய்வுக் குழுவின் தலைவராகப் பணி புரிந்த Christopher Portier கூறினார்.
உலக நலவாழ்வு நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக பிரித்தானிய நலத்துறை அறிவித்துள்ளது.
டீசல் புகையால் நுரையீரல் புற்று நோய் உருவாகும் ஆபத்து உள்ளது என்றாலும், புகை பிடிப்பதால் நுரையீரல் புற்று நோய் உருவாகும் ஆபத்து இன்னும் பல மடங்கு அதிகம் என்று புற்றுநோய் மருத்துவர் Lesley Walker எச்சரிக்கை விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.